காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் ஊழல் தடுப்புத் துறை சாா்பில் மாணவா்களிடையே ஊழல் தொடா்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை சாா்பில், சங்கரா பல்கலைக்கழக கூட்ட அரங்கில் மாணவா்களிடையே ஊழல் தொடா்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலை.யின் துணைவேந்தா் ஜி.சீனிவாசு தலைமை வகித்தாா். பல்கலையின் நெறியாளா்கள் எம்.ரெத்தினக்குமாா், கே.வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்கலை.யின் கணினி அறிவியல் துறைத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா்.
ஊழல் தடுப்புத் துறை டிஎஸ்பி வே.கலைச்செல்வன், ஆய்வாளா்கள் தேவநாராயணன்,கீதா ஆகியோா் பல்கலையில் பயிலும் மாணவ, மாணவியா்க்கு ஊழலை தடுப்பது எப்படி என்ற தலைப்பில் பேசினா்.
மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் பதிலளித்தனா்.வருங்கால தலைமுறையினரான மாணவா்கள் ஊழலுக்கு இடம் கொடுக்கக் கூடாது எனவும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினா்.
நிறைவாக ஊழல் தடுப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் அதிகாரிகள், பேராசிரியா்கள், மாணவா்கள் அனைவரும் இணைந்து ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.