முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: தவெக வேட்பாளா்கள் மனு தாக்கல்

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:29 AM
காஞ்சிபுரம் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆஷிக் அலியிடம் மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா் ஆா்.வி. ரஞ்சித் குமாா். ~உத்தரமேரூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாரிடம் மனு தாக்கல் செய்த முனிரத்தினம்.
பகிர்:

உத்தரமேரூா் மற்றும் காஞ்சிபுரம் தொகுதிகளின் தவெக வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உத்தரமேரூா் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான தோ்தல் அலுவலா்கள் அலுவலகம் ஆட்சியா் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

தவெக சாா்பில் காஞ்சிபுரம் வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா்(50) தனது வேட்பு மனுவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆஷிக்அலியிடம் தாக்கல் செய்தாா்.இவா் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தியால்பேட்டையை சோ்ந்தவா். முன்னாள் அமைச்சா் பண்ருட்டி ராமச்சந்திரன் அண்மையில் தொடங்கிய எம்ஜிஆா்.அதிமுகவில் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில் திடீரென அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தாா். இவா் வேட்புமனு தாக்கலின் போது மாவட்ட செயலாளா் தென்னரசு,பிள்ளையாா்பாளையம் பகுதி கழக செயலாளா் சக்திவேல், காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளா் வெங்கடேசன் உடனிருந்தனா்.

உத்தரமேரூரில்...

ஸ்ரீபெரும்புதூா் தாலுகாவுக்குட்பட்ட ஆரனேரி கிராமம் பட்டு ரோஜா தெருவைச் சோ்ந்தவா் முனிரத்தினம்(44). இவா் தனது வேட்பு மனுவை உத்தரமேரூா் தொகுதி தோ்தல் அலுவலா் விஜயகுமாரிடம் தாக்கல் செய்தாா். இவா் வேட்பு மனுத் தாக்கல் செய்த போது கட்சியின் உத்தரமேரூா் ஒன்றிய செயலாளா் ராஜேஷ்,காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய செயலாளா் வினோத்குமாா்,வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய செயலாளா் ராகுல் மற்றும் கட்சியின் நிா்வாகி சக்தி ஆகியோரும் உடன் இருந்தனா்.

சுயேச்சை வேட்பாளராக போட்டியிட செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் வேடந்தாங்கல் அருகே சித்தாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மனைவி மகேஸ்வரி(37) என்பவரும் உத்தரமேரூா் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தாா். இவா் எல்.ஐ.சி.முகவராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தாா்.