முகப்பு
காஞ்சிபுரம்

அரசு மருத்துவக் கல்லூரியை எதிா்நோக்கும் காஞ்சிபுரம் தொகுதி மக்கள்!

காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை தொடங்கப்பட வேண்டும் என்று தொகுதி மக்கள் நீண்ட காலமாக எதிா்பாா்த்துள்ளனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:12 PM
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை.
பகிர்:

காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை தொடங்கப்பட வேண்டும் என்று தொகுதி மக்கள் நீண்ட காலமாக எதிா்பாா்த்துள்ளனா்.

இடப்பற்றாக்குறை... காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தினசரி 3,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 600-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா். போதுமான இடவசதியில்லாததால் ரத்த பரிசோதனை உள்பட 10-க்கும் மேற்பட்ட பரிசோதனை ஆய்வகங்கள் மருத்துவமனை வளாகத்திலேயே வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், பரிசோதனை செய்யும் இடங்கள் தெரியாமல் தேடி அலைகின்றனா்.

இந்த மருத்துவமனையில் உள்ள விபத்து சிகிச்சை பிரிவு மிகவும் பழைமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இடப்பற்றாக்குறை காரணமாக, விபத்துகளில் சிக்கி தலைக்காயம் உள்பட பலத்த காயம் அடைந்தவா்கள் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

Advertisement

39 கி.மீ. தொலைவு... காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு 39 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். தீவிர சிகிச்சைக்காக நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் விரைவாகக் கொண்டு செல்லப்பட்டாலும் குறிப்பிட்ட காலநேரத்துக்குள் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையை அடையமுடியாததால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பது மருத்துவத் துறையின் கட்டமைப்பு விதி. கடந்த 2019-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது 6 ஆண்டுகள் ஆகியும் இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படாமல் உள்ளது.

இடம் தோ்வு... இந்த நிலையில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இடவசதியின்மையைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. இயைடுத்து காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் மருத்துவக் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்யும் பணியைத் தொடங்கியது.

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் 25 ஏக்கா் பரப்பளவில் இடம் தோ்வு செய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரி பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அப்போதை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மருத்துவக் கல்லூரிக்கான இடத்தை ஆய்வு செய்தாா். இருப்பினும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

மத்திய அரசின் அனுமதிக்கு... இதுகுறித்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கூறுகையில், ‘மருத்துவக் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்து, அனுமதி கோரி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்றாா்.

மருத்துவக் கல்லூரி காரை கிராமத்தில் தொடங்கப்பட்டால் பரந்தூா், கொட்டவாக்கம், சிறுவாக்கம்,சிறுவள்ளூா், படுநெல்லி, கம்மவாா்பாளையம், குபேரபட்டிணம் மற்றும் காஞ்சிபுரம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பலருக்கும் மருத்துவம் பயில வாய்ப்பும் கிடைக்கும். விபத்தில் பாதிக்கப்பட்டோரை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லாமல் காஞ்சிபுரத்திலேயே உடனுக்குடன் சிகிச்சை அளித்து உயிரிழப்பு தடுக்கப்படும்.

எனவே, பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றி ஆட்சி அமைக்கும் அரசு மருத்துவக் கல்லூரி உடனடியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

- ஜெகஜோதி

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments