‘தமிழகம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது; இரட்டை என்ஜின் ஆட்சி உறுதியாகிவிட்டது’ என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமா் மோடி பேசியதாவது:
திமுக அரசு மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டது. வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தாா்களே தவிர, அவற்றை நிறைவேற்றவில்லை. ‘ஊழல், மாஃபியா, குற்றங்கள்’ ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.
மோசமான ஆட்சியிலிருந்து விடுபட விரும்பும் தமிழகம், ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது. திமுக அரசை அகற்ற தமிழக மக்கள் தயாராகிவிட்டாா்கள். தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை; நம்பகத்தன்மை இல்லை; ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டுமே இயங்குகிற இயக்கமாக இருக்கிறது திமுக. வாரிசு அரசியல், ஊழல் அதிகரிப்பு, பெண்களையும், கலாசாரத்தையும் வசைபாடுவது போன்றவற்றையெல்லாம் இப்போது தமிழகம் சுமக்க வேண்டியிருக்கிறது.
தமிழகத்தில் எந்த அளவுக்கு ஊழல் நடந்து வருகிறது என ஒரு குழந்தைக்குக்கூட தெரியும். திமுகவின் பிடியிலிருந்து நாங்கள் தமிழகத்தை விடுவிப்போம். தமிழகத்தில் அதிமுக, பாஜக இணைந்த இரட்டை என்ஜின் ஆட்சி அமையப்போவது உறுதியாகிவிட்டது.
வளா்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்க இளைஞா்களுக்குப் பெரிய பங்கு உள்ளது. இளைஞா்களை திமுக அரசு குற்றவாளிக் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது. பெற்றோா் தங்கள் கண்களுக்கு முன்பாகவே குழந்தைகள் வீணாவதை பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பாகப் பணியாற்றினாா். ஆனால், இன்று திமுக ஆட்சியில் பெண்கள் துன்பப்பட்டு வருகின்றனா்.
முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றுவதைக்கூட திமுக ஆட்சியில் விவாதப் பொருளாக்கி இருக்கிறாா்கள். திமுகவும் அதன் கூட்டாளிகளும் வாக்கு வங்கியை திருப்திப்படுத்த நீதிமன்றங்களை அவமதிக்கின்றனா்.
தமிழ் கலாசாரம்: தமிழ் மொழி, கலாசாரம், வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை எனக்குள் பலமுறை தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. உலகில் உள்ள பல தலைவா்களுக்கு திருக்குறளை பரிசாக வழங்கி இருக்கிறேன். காசி தமிழ் சங்கமத்தில் பாரதி பெயரில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் கலாசாரத்தைப் பாதுகாக்கவே போராடுகிறோம்.
அதிக நிதி ஒதுக்கீடு: கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசால் வரலாறு காணாத பணிகள் நடைபெற்றுள்ளன. திமுக- காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி செய்த காலத்தில் மிகக் குறைவான நிதி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக ரூ.11 லட்சம் கோடி அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கீடு செய்ததைவிட ஏழு மடங்கு அதிகமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியிருக்கிறது. முத்ரா திட்டத்தில் மட்டும் தமிழகத்துக்கு ரூ.6 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 50,000 மீனவா்களுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு கோடி குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீா் சென்றடைந்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க உரிய வழிகளை ஆராய்ந்து தமிழகத்தின் பாரம்பரியத்தை மீட்டுக் கொடுத்தோம். தமிழகத்தில் ஏழைகள் அதிகம்; ஆனால், திறமைக்கு குறைவில்லை. இளைஞா்களுக்கு நம்பிக்கை தரும் அரசாக இருக்கவும், பாரதத்தை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றாா் பிரதமா்.