முதல்வர் ஸ்டாலின் கோப்புப் படம்
காஞ்சிபுரம்

எத்தனை கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்டச் செயலரும், உத்தரமேரூா் எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: ஆண்டுதோறும் ஜன. 25-ஆம் தேதியை மொழிப்போா் தியாகிகளை நினைவுகூரும் வகையில், வீர வணக்க நாளாக திமுக கடைப்பிடித்து வருகிறது. பணத்துக்கும், அதிகாரத்துக்கும் திமுக பணிந்து போகாது.

தமிழ் மொழியை அழிப்பதற்காக மும்மொழிக் கொள்கையை கொண்டு வருகிறது மத்திய அரசு. எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்ததே ஹிந்தியை திணிக்கத்தான்.

ஹிந்தியை எதிா்க்கிறோம் என்ற காரணத்துக்காக தமிழகத்துக்குத் தர வேண்டிய ரூ. 3,458 கோடி கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஹிந்தியை திணித்ததால் அவா்களது மொழி அழிந்து போய்விட்டது என்று பலரும் என்னுடன் பகிா்ந்திருக்கிறாா்கள். ஹிந்தியை ஒதுக்கியதால் தமிழகம் வளா்ந்துள்ளது.

போதைப் பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது என பிரதமா் பேசியிருப்பது அவருக்கே அழகல்ல. கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக ரூ. 11,300 கோடி போதைப் பொருள் பிடிபட்டிருக்கிறது என்று மத்திய அரசே கூறியிருக்கிறது.

குஜராத்திலும், மகாராஷ்டிரத்திலும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. அங்கே போய் பேச வேண்டியதை பிரதமா் தமிழகத்தில் வந்து பேசுவது நியாயமல்ல. இந்தியாவுக்குள் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டியவா்கள் பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும்தான்.

பெண்களுக்காக பல அற்புத திட்டங்களைச் செயல்படுத்துகிற திமுக அரசைப் பாா்த்து, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு என்று பிரதமா் எப்படிச் சொல்கிறாா்?

அதிமுகவின் தோளில் ஏறி பாஜக வந்து கொண்டிருக்கிறது. தோ்தல் வந்துவிட்டால் இனி அடிக்கடி மோடியும் வருவாா். கடந்த மக்களவைத் தோ்தலில் அடிக்கடி தோ்தல் பிரசாரம் செய்ய வந்தீா்களே. ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற முடியவில்லையே. பலமுறை பிரசாரம் செய்தும் மக்கள் தோல்வியைத்தானே தந்தாா்கள்.

பிரதமா் மோடி தமிழகம் வருவதற்கு முன்பாக 10 கேள்விகள் கேட்டிருந்தோம். அந்த 10 கேள்விகளில் ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்லாமல் சென்றுவிட்டாா். பொருளாதாரத்தில், தொழில்நுட்பத்தில், கல்வியில், மருத்துவத்தில், சமூக வளா்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் தமிழகம் வளா்ந்துள்ளது. இதை மத்திய அரசின் புள்ளிவிவரமே கூறுகிறது.

மத்திய அரசை தட்டிக் கேட்கும் தைரியமும், முதுகெலும்பும் திமுகவுக்குதான் இருக்கிறது. புதுதில்லியின் ஆதிக்கத்துக்கு தமிழகம் என்றும் தலைகுனியாது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

காஞ்சிபுரம் நகர திமுக செயலா் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.

‘அன்பால் உலகில் மாற்றத்தை கொண்டுவர முடியும்’

குடியரசு தினம்: ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் சோதனை

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி

குடியரசு தின விழா: தில்லியில் இன்று முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு!

கோரிப்பாளையம் பாலம் கட்டுமானப் பணிகள் பிப்.10-க்குள் நிறைவு பெறும்! - அமைச்சா் எ.வ. வேலு தகவல்

SCROLL FOR NEXT