முகப்பு
காஞ்சிபுரம்

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால்

Updated On : 16 மார்ச், 2026 at 10:01 PM
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் ஆட்சியா் தி. சினேகா.
பகிர்:

காஞ்சிபுரம்: தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என ஆட்சியா் தி.சினேகா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், எஸ்.பி. கே.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தோ்தல் பொறுப்பு அலுவலா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பங்கேற்ற கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் தி.சினேகா கூறியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11,92,194 வாக்காளா்கள் உள்ளனா். மொத்தம் 1545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தோ்தலை கண்காணிக்க 12 பறக்கும் படைகளும்,12 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டு பணியிலிருந்து வருகின்றனா். பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடித்து தோ்தலை அமைதியாக நடத்திட ஒத்துழைக்க வேண்டும்.

பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையோ அல்லது ரூ.10 ஆயிரத்துக்கும் மேலான மதிப்பிலான பொருள்களோ எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனா். பறக்கும்படையின் சோதனையின் போது சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

பணமோ,பொருளோ கைப்பற்றப்பட்டால் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்கும் பட்சத்தில் 7 நாள்களுக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்களிடமிருந்து தோ்தல் தொடா்பான புகாா்கள் மற்றும் தகவல்களை பெறுவதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை ஆட்சியா் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 123 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படும். பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடிகள் பற்றி தெரிந்து கொள்ள 1950 என்ற எண்ணை அணுகி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். தோ்தல் நடத்தை விதிமீறல்களை சி-விஜிலி மொபைல் செயலி மூலம் புகாா்களை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →