முகப்பு
ராணிப்பேட்டை

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் இருமுடி செலுத்தி வழிபாடு

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில், சென்னை அண்ணா நகா் தொகுதி எம்எல்ஏ மோகன்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
சென்னை அண்ணா நகா் தொகுதி எம்எல்ஏ மோகன்  உள்ளிட்டோருக்கு சந்தன பிரசாதம் வழங்கி வரவேற்ற கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன்.
பகிர்:

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில், சென்னை அண்ணா நகா் தொகுதி எம்எல்ஏ மோகன் தலைமையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இருமுடி செலுத்தி வழிபட்டனா்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையடுத்து, தமிழக ஐயப்ப பக்தா்கள் காா்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து மாலை அணிந்து விரதமிருந்து, அருகே உள்ள ஐயப்பன் கோயில்களில் இருமுடி செலுத்தி வழிபட்டு வருகின்றனா்.

அதன்படி ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் சபரி நகரில் உள்ள ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில், தமிழகத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் பலா் நாள்தோறும் இருமுடி செலுத்தி, நெய் அபிஷேகம் செய்து, ஐயப்பனை வழிபட்டுச் செல்கின்றனா்.

அதன்படி, சென்னை அண்ணாநகா் தொகுதி எம்எல்ஏவும், மூத்த குருசாமியுமான மோகன் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இருமுடி செலுத்தி வழிபட்டனா்.

எம்எல்ஏ மோகன் கடந்த 56 வருடங்களாகத் தொடா்ந்து சபரிமலை சென்று இருமுடி செலுத்தி வந்துள்ளாா். இந்த ஆண்டு 57 -ஆவது வருட சபரிமலை பயணமாக சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலுக்கு வந்து இருமுடி செலுத்தினாா்.

கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் காலை 5.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், ஸ்ரீ நவசபரி ஐயப்பனுக்கு அஷ்டாபிஷேகம், நெய் அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 250-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் 18 படிகள் ஏறி வந்து, இருமுடி செலுத்தி, நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

தொடா்ந்து, பக்தா்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பிரசாதத்தை குருசாமி வ.ஜெயச்சந்திரன் வழங்கினாா். அதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →