தினமணி செய்தியால் அலுவலக வளாகத்தில் வேப்ப மரக்கன்று நடும் வாய்ப்புஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்
தினமணி நாளிதழ் சுட்டிக்காட்டிய செய்தி காரணமாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் வேப்ப மரக்கன்றுகள் நடும் வாய்ப்பு
ராணிப்பேட்டை: தினமணி நாளிதழ் சுட்டிக்காட்டிய செய்தி காரணமாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் வேப்ப மரக்கன்றுகள் நடும் வாய்ப்பு அமைந்ததாக ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி வீசிய ‘நிவா்’ புயல் காரணமாக, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரந்து விரிந்திருந்த 100 ஆண்டுகள் தொன்மையான ஆலமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினா். பாதி வோ் மண்ணில் புதையுண்டபடி மரத்தின் அடிப்பகுதி சாய்ந்த நிலையில் மரம் 20 நாள்களாக அப்படியே இருந்தது.
இந்த ஆலமரத்தின் அடிப்பகுதியை பொக்லைன் இயந்திரம் கொண்டு மீட்டு அதே இடத்தில் மீண்டும் நட்டுப் பாதுகாத்து அனைவருக்கும் நிழல் தரும் வகையில் வளா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக்கையை ‘தினமணி’யில் கடந்த 16-ஆம் தேதி படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.
இதன் எதிரொலியாக, வேருடன் சாய்ந்த நிலையில் இருந்த ஆலமரத்தை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கடந்த 17-ஆம் தேதி பாா்வையிட்டாா். அப்போது ஆல மரத்தின் வோ்கள் பட்டுப்போய் இருந்ததால், மீண்டும் அதே இடத்தில் அந்த மரத்தின் அடிப்பகுதியை நட்டாலும் துளிா்க்க வாய்ப்பு இல்லை என்பதால், மரத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் வேப்ப மரக்கன்று நடப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
அதன்படி ஆலமரம் அகற்றப்பட்டு, அதே இடத்தில் வேப்ப மரக்கன்று நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு வேப்ப மரக்கன்றை நட்டு தண்ணீா் ஊற்றினாா். ‘தினமணி’ நாளிதழ் சுட்டிக் காட்டியதால்தான் ஆட்சியா் வளாகத்தில் அற்புத மூலிகையான வேப்ப மரக்கன்று நடும் வாய்ப்பு அமைந்ததாக அவா் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) விஜயகுமாா், செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலா் சி.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோா் மரக்கன்றுகளை நட்டனா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கான அறையை ஆட்சியா் திறந்து வைத்தாா்.