சொல்லப் போனால்... காங்கிரஸ் கட்டெறும்பாவது ஏன்?
தொடர்ந்து காங்கிரஸ் தோற்றுக் கொண்டிருக்க என்ன காரணம்? தமிழ்நாட்டு அரசியல் சூழலை முன்வைத்து...
1967 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்று, அண்ணா தலைமையிலான திமுக அரசு பதவியேற்றதும், காங்கிரஸ் ஆட்சியின் கடைசி முதல்வராக இருந்த எம். பக்தவத்சலம் எழுதிய பிரசுரத்தின் பெயர் – காங்கிரஸ் தோற்றது ஏன்? ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்து அறுபதாண்டுகளைத் தொடப்போகும் இவ்வேளையில் நாடு தழுவிய அளவில் கட்சிக்குள் காங்கிரஸ் நடத்த வேண்டிய மாபெரும் சுய விமர்சன விவாதத்துக்கான நல்ல தலைப்பு - காங்கிரஸ் தோற்பது ஏன்?
நாடு விடுதலை பெற்றதிலிருந்து ஆட்சியிலிருந்த காங்கிரஸ், 1967 - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுப் போனதற்கு வலுவான காரணங்கள் இருந்தன.
1965-ல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், உயிர்ப் பலிகள், விலைவாசி உயர்வு, அரிசித் தட்டுப்பாடு, மக்கள் மத்தியில் செல்வாக்குடன் முதல்வராக இருந்த காமராஜர் கட்சிப் பணிக்கென விலக, நல்ல நிர்வாகியென்றாலும் காமராஜர் அளவுக்குக் களம் காணாதவரான எம். பக்தவத்சலம் முதல்வரானது, பெருமளவில் இளைய தலைமுறையினரால் முன்னெடுக்கப்பட்டு வளர்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகம்; காங்கிரஸுக்கு எதிராக மூத்த தலைவர் ராஜாஜியின் சுதந்திரா கட்சி போன்றவற்றுடன் இணைந்து அமைத்த வலுவான கூட்டணி...
திமுக அரசில் அண்ணாவின் திடீர் மறைவுக்குப் பின் முதல்வராக மு. கருணாநிதி பொறுப்பேற்றார். 1972-ல் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில், மத்தியில் செல்வாக்குடன் இருந்த பிரதமர் இந்திரா காந்தி ஓராண்டு முன்னதாகவே மக்களவைத் தேர்தலை நடத்த முனைந்தபோது, தமிழ்நாடு சட்டப்பேரவையையும் கலைத்து (இந்திரா காங்கிரஸ் கூட்டணியுடன்) போட்டியிட்ட திமுக, 1971 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 28 மக்களவைத் தொகுதிகளில் வென்ற இந்திரா காங்கிரஸ், பேரவைக்குப் போட்டியிடவில்லை. வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்கிற அளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் ஏராளமான தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்றது (அப்போது ராஜாஜி அணி மாறி ஸ்தாபன காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்திருந்தார்).
1977 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள்ளேயே நிறைய மாற்றங்கள் - எம்ஜிஆரின் அதிமுக தோற்றம், நாடு தழுவிய நெருக்கடி நிலை அமல், காமராஜர் மறைவு, வலுவான ஸ்தாபன காங்கிரஸ் உடைந்து இந்திரா காங்கிரஸுடன் இணைப்பு, திமுக ஆட்சி கலைப்பு என. தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், ஜனதா கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. தனிப் பெரும்பான்மையுடன் முதல்வராக எம்.ஜி.ஆர். பொறுப்பேற்றார்.
1980 ஜனவரியில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டி. 38 தொகுதிகளில் கூட்டணி வெற்றி. உடனே, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசைக் கலைத்து, 1980 மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல். ஆனால், அதே கூட்டணிக்குப் படுதோல்வி (காங்கிரஸ் 114 தொகுதிகளில் போட்டியிட்டு 31-ல் வெற்றி). எம்ஜிஆர் மீண்டும் முதல்வர்.
1984-ல் அதிமுகவுடன் கூட்டணி, எம்ஜிஆர் மீண்டும் முதல்வர். காங்கிரஸ் 73-ல் போட்டி, 61-ல் வெற்றி.
பின்னர் எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து, 1989-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜானகி, ஜெயலலிதா அணிகள் என்று அதிமுக பிரிய நான்கு கூட்டணிகள். காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது (26 இடங்களில் வெற்றி). திமுக வென்று ஆட்சியமைத்தது, முதல்வரானார் மு. கருணாநிதி.
திமுக ஆட்சி கலைக்கப்பட்டு 1991-ல் நடந்த பேரவைத் தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி. ராஜீவ் காந்தி மரணத்துடன் வீசிய அனுதாப அலை. அதிமுக வென்று முதல்வரானார் ஜெயலலிதா. காங்கிரஸ் 60 இடங்களில் வெற்றி.
1996 பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி (அதிமுக 4 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் சுழியம்!). புதிதாக உருவான தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைந்து திமுக கூட்டணி வென்றது. முதல்வர் மு. கருணாநிதி.
2001-ல் அதிமுகவுடன் காங்கிரஸ் - தமாகா கூட்டணி (எதிர்த்து திமுக - பாஜக கூட்டணி). ஜெயலலிதா மீண்டும் முதல்வர். காங்கிரஸ் 14 தொகுதிகளில் போட்டியிட்டு 7-ல் வெற்றி.
[2004 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி, 40 தொகுதிகளிலும் வெற்றி].
2006 பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி. 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்தது. முதல்வர் கருணாநிதி. வெளியே இருந்து காங்கிரஸ் ஆதரித்தது. போட்டியிட்ட 48-ல் 34 வெற்றி.
2011-ல் திமுகவுடன் கூட்டணி. 63 தொகுதிகளைப் பெற்று காங்கிரஸ் 58 இடங்களில் தோல்வியுற்றது. அதிமுக ஆட்சி அமைத்தது.
[2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு முழுத் தோல்வி]
2016, 2021 பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து திமுகவுடனேயே கூட்டணி. 2016-ல் 41 தொகுதிகளைப் பெற்று 8 இடங்களில் மட்டுமே வெற்றி. 2021-ல் 25-ல் போட்டி, 18-ல் வெற்றி.
காமராஜர் மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் தோற்றத்தைத் தொடர்ந்து, திமுக – அதிமுக என தமிழ்நாட்டு அரசியல் துருவங்கொண்டுவிட்ட நிலையில், அதன் பிறகு தொடர்ந்து கூட்டணியை மட்டுமே நம்பிச் செயல்பட வேண்டிய நிலையில்தான் இருந்து வந்திருக்கிறது காங்கிரஸ். தனித்துப் போட்டியிட்ட மிகச் சில தேர்தல்களிலும் பெரும் தோல்வி கண்டிருக்கிறது.
2004-ல் உருவான திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாற்போல ஏதோவொரு வகையில் இணக்கமாகவே இருந்திருக்கிறது.
இப்போதைய 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஓராண்டுக்கு முன்னர் அதிமுக – பாரதிய ஜனதா கூட்டணி அறிவிக்கப்பட்டபோதே, திமுக கூட்டணி ஏற்கெனவே வலுவாக இருப்பதாகக் கருதப்பட்டது. ஏனெனில், திமுக தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் மிக நெருக்கமாகத் தொடர்பில் இருந்தார்கள்; செயல்பட்டார்கள்.
சோனியா காந்தியைப் பிரதமர் வேட்பாளர் என்று திமுக தலைவர் கருணாநிதிதான் அறிவித்தார். அதேபோல ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக எவ்விதத் தயக்கமுமின்றி மு.க. ஸ்டாலின்தான் முன்னிறுத்தினார் (காங்கிரஸ் தலைவர்களில்கூட சிலர் சொல்லத் தயங்குகிற நிலையில்!).
ஸ்டாலினும் ராகுல் காந்தியும் இணைந்து தோன்றிய மேடைகளில் - நிகழ்ச்சிகளில் இருவரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நெருக்கத்தையும் இணக்கத்தையும்கூட காட்டினர்.
அகில இந்திய அரசியலிலும் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் காங்கிரஸுக்கு திரிணாமுல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி போன்ற வேறெந்தவொரு கட்சியும் தெரிவிக்க முன்வராத நிலையான ஆதரவைத் தொடர்ந்தாற்போல, ஆளும் பாரதிய ஜனதா எதிர்ப்பு என்ற புள்ளியில் இணைந்து, திமுக அளித்து வந்தது.
எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று திமுக கூட்டணியினர் நினைத்துக் கொண்டிருக்க - ‘200 பிளஸ் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம்’ என முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லிக்கொண்டிருக்க, திடீரென அதிகத் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸில் சில தலைவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். அதையே தில்லித் தலைவர்கள் சிலரும் எதிரொலித்தனர். இவ்வளவு காலமாக இணைந்து இருந்தோமே என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழ்நாட்டில் சிலர் மேலும் இறங்கியடிக்கத் தொடங்கினர்.
இன்னொரு பக்கம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் பேச்சு நடத்துவதைப் போன்ற சித்திரிப்புகள், வதந்திகளோ, உண்மையோ விறுவிறுப்பாகப் பரவிய தகவல்கள். விஜய்யை காங்கிரஸ் மேலிடத்தைச் சேர்ந்த அவர் பார்த்தார், இவர் பார்த்தார் என்ற கிசுகிசுக்கள் வேறு.
ஏற்கெனவே, கரூரில் 41 பேர் பலியானபோதுகூட, சென்னையிலிருந்த விஜய்யை அழைத்துதான் ராகுல் காந்தி விசாரித்தார் அல்லது ஆறுதல் கூறினார் (பாரதிய ஜனதா தலைவர்கள் மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் இருந்த கரூருக்குச் சென்றிருக்கலாம்!). மேலும், விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் வெளிவருவதில் சிக்கல் நேரிட்டபோது, தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான தாக்குதல் எனக் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
காங்கிரஸின் எந்த உயர் தலைவரும் கூட்டணிப் பேச்சுகளில் பங்கேற்று முடிவுக்கு வர முயலாத நிலையில் தொடர்ந்து - கட்சியின் மேலிடப் பார்வையாளர் கிரீஷ் சோடங்கரைத் தவிர்த்து - எல்லாமும் இழுபட்டுக் கொண்டிருக்க, சமூக ஊடகங்களில் இரு தரப்பு ஆதரவாளர்களும் பரஸ்பரம் விமர்சிக்கத் தலைப்பட்டனர். பழைய வரலாறுகள் தோண்டியெடுக்கப்பட்டன; அலசிக் காயப் போடப்பட்டன.
இவற்றுக்கிடையே ஹைதராபாத்தில் காங்கிரஸ் – த.வெ.க. கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டதாகக்கூட ஊடக வட்டாரங்கள் பரபரத்தன. கூட்டணி இருக்காது என்றே எல்லாரும் முடிவுக்கு வந்த நிலையில்தான், கடைசி நேரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் சென்று பார்த்துப் பேசினார் (யாருடைய அறிவுரைப்படி இந்த சந்திப்பு நடைபெற்றதெனத் தெரியவில்லை என்றாலும் சோனியா காந்தியைத்தான் கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன). தொடர்ந்து, தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணி முடிவானது; 28 பிளஸ் 1 எனத் தொகுதிகள் எண்ணிக்கையும் அறிவிக்கப்பட்டது.
இவற்றையெல்லாம் அரசியல் எனக் கொள்ளலாம்.
ஆனால், இந்த இழுபறிக்கு இடையேதான் முதல்வர் மு.க. ஸ்டாலினுடைய பிறந்த நாளும் வந்தது. தமிழ்நாட்டில் இந்தக் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி நினைத்திருந்தால் அதிரடியாக நேரிலேயே வந்துகூட ஸ்டாலினை வாழ்த்தியிருக்கலாம் (தமிழ்நாட்டுக்கு மூன்று முறை வந்துசென்றுவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி!). என்ன நினைத்தாரோ, மிகச் சாதாரணமாக (கடமைக்கென?) எக்ஸ் தளத்தில் ஸ்டாலினுக்கான பிறந்த நாள் வாழ்த்தொன்றைப் பதிவிட்டார் ராகுல் காந்தி.
“தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
“நல்ல உடல் நலமும் வலுவும் தமிழக மக்களுக்கான அர்ப்பணிப்பான சேவைக்காக நீண்ட ஆயுளும் தாங்கள் பெற வேண்டும்!”
ஆனால், இதே ராகுல் காந்தி, இதே ஸ்டாலினுடைய பிறந்த நாளில் கடந்த ஆண்டு இட்ட பதிவின் வரிகள்...
“என்னுடைய சகோதரரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
“இந்தியாவின் பாரம்பரியம் மிக்க பன்முகத் தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியல் சாசன விழுமியங்களைக் காப்பதில் நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து நிற்போம்.
“நல்ல உடல் நலமும் தமிழ்நாடு மக்களுக்குச் சேவையாற்றுவதில் தொடர்ச்சியான வெற்றியும் பெற வேண்டும்.”
ராகுல் காந்தியின் இவ்விரு வாழ்த்துச் செய்திகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அறிந்துகொள்ள அரசியல் தெரிந்திருக்க வேண்டியதில்லை. வாழ்த்துச் செய்தி வெளியானவுடனே இதுதொடர்பான கருத்துகள் சமூக ஊடகங்களிலும் வெளிப்பட்டன. அரசியல் வேறு, நட்பு வேறு, தேர்தல் கூட்டணி வேறு!
நாட்டில் கர்நாடகம், தெலங்கானா, ஹிமாச்சல் என மூன்று மாநிலங்களில்தான் காங்கிரஸ் தற்போது ஆட்சியில் இருக்கிறது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள புதுவை உள்பட ஐந்து மாநிலங்களில் கேரளத்தில் மட்டும்தான் ஆட்சிக்காகப் போட்டியிடக் கூடிய நிலையில் காங்கிரஸ் இருக்கிறதெனலாம்.
மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இங்கே ஒருகாலத்தில் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் என்றிருந்த நிலை மாறி, காங்கிரஸிலிருந்து மமதா பானர்ஜி வெளியேறியதும் கம்யூனிஸ்ட் - திரிணாமுல் காங்கிரஸ் என்றாகி, இப்போது கிட்டத்தட்ட திரிணாமுல் – பாரதிய ஜனதா என மாறிவிட்டதாகத்தான் தோன்றுகிறது. காங்கிரஸ் எங்கே இருக்கிறதென வரும் தேர்தல் முடிவுகள்தான் தெரிவிக்கும். ஏனெனில், கடந்த 2021 பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 91 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்றது.
காங்கிரஸைப் பொருத்தவரை அசாமிலும் நிலைமை மிகவும் கடினமாகவே இருப்பதாகவே செய்திகள் வெளியாகின்றன. தேர்தல் வரும் வேளையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் போராவே பாரதிய ஜனதா கட்சியில் போய்ச் சேர்ந்துவிட்டார். தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாரதிய ஜனதாவுக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
2024 சட்டப்பேரவைத் தேர்தலில் ஹரியாணாவில் காங்கிரஸ்தான் வென்று ஆட்சியமைக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், கட்சிக்குள் குமாரி செல்ஜாவுக்கும் பூபேந்திர சிங் ஹுடாவுக்கும் மோதல். காங்கிரஸ் தோற்றது. சத்தீஸ்கரிலும் பூபேஷ் பாகலுக்கும் டி.எஸ். சிங் தேவுக்கும் மோதல். காங்கிரஸ் தோற்றது. ராஜஸ்தானில் சச்சின் பைலட் – அசோக் கெலாட், தோல்வி. மத்தியப் பிரதேசத்திலும் இதேபோல அரசியல்; தோல்வி!
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, 60 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிற காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், கடைசித் தருணம் வரையிலும் யார் முதல்வர் வேட்பாளர்? என்ற எளிய கேள்விக்குப் பதிலளிக்க மறுத்தனர். ஒட்டுமொத்த மாநிலத்துக்கே தெரியும், வெற்றி பெற்றால் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ்தான் முதல்வர் என. ஆனால், அதைச் சொல்வதில் காங்கிரஸ் எதற்காகத் தயங்கியது என்று தெரியவில்லை. கடைசியில் ஆர்ஜேடி தொண்டர்களே காங்கிரஸை நம்பவில்லை போல. அதுவே கூட்டணியின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது என்கிறார்கள்.
மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தபோதிலும் தேர்தல் வருவதற்கு சில மாதங்கள் முன்னரே பிரதமர் நரேந்திர மோடியில் தொடங்கி பாரதிய ஜனதா தலைவர்கள் குறிப்பிட்ட மாநிலங்களுக்குச் சென்று பிரசாரங்களைத் தொடங்கி மக்களை நெருங்குகின்றனர். காங்கிரஸிலோ சில பிரசார கூட்டங்களுக்கு மட்டுமே தலைவர்கள் வருகின்றனர்.
ஆட்சியை இழந்த பின் ஏறத்தாழ 60 ஆண்டுகளாகக் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகவே இருக்கும் தமிழ்நாட்டில் செல்வாக்குள்ள ஒரு கட்சியென இன்னமும் காங்கிரஸ் நிலைத்திருப்பதில் திமுக அல்லது அதிமுகவுக்குதான் கணிசமான பங்கிருக்கிறது – கடந்த இருபது ஆண்டுகளாகத் திமுகவுக்கு; தற்காலம் ராகுலைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதிலும்.
ஆனால், என்ன காரணத்தாலோ இப்போது கடைசி நேரத்தில் தமிழ்நாட்டிலும் கூட்டணியில் திடீர் சலசலப்பு. இதனால் யார் பயன் பெற்றார்கள், பெற விழைந்தார்கள் அல்லது யார் இயக்கினார்கள் என்று வெளித்தெரிய வாய்ப்பில்லை.
கூட்டணி முடிவான பிறகு காங்கிரஸில் பேரமைதி. தொகுதிகளுக்காக உள்ளுக்குள் போராடிக் கொண்டிருக்கலாம். தேர்தல் நேரத்தில் கூடுதல் தொகுதிகளுக்காகக் குரல் கொடுப்பது மட்டுமின்றி, மற்ற காலங்களில் மக்களுக்காகப் போராடுவதிலும் கட்சி அமைப்பை அடித்தளம் வரையிலும் வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தலாம். கடைசியாக, 1970-களின் பிற்பகுதியில் நடைபெற்றதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல். அதன் பிறகு அனேகமாக எல்லாமே நியமனங்கள்தான். அந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர்கள் கருப்பையா மூப்பனாரும் பழ. நெடுமாறனும் என்பதேகூட இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (நெடுமாறன் காங்கிரஸில் இருந்தாரா? – மைண்ட் வாய்ஸ்!).
கடைசி நேரத்தில் கூட்டணிக் குழப்பத்தால் எத்தகைய பலன் விளையும் என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியும். காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளிலும் பா.ஜ.க. – அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என ஏற்கெனவே காங்கிரஸில் இருந்தவரான மாநில பாஜக தலைவர்களில் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்!
தற்போதைய நிலையில் அகில இந்திய அளவிலும்கூட ஒன்று மட்டும் நிச்சயம், மாநிலந்தோறும் தொடர்ந்து காங்கிரஸ் தோற்பதற்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமே காரணம் அல்ல என்பதை காங்கிரஸ் உணர வேண்டிய, உணர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்திருக்கிறது என்றால் வியப்பில்லை!