முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... நம்பிக்கையில்லா கூட்டணி! என்ன செய்யப் போகிறார்கள்?

ஜூன் 8 ஆம் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முன்வைத்து...

Updated On : 7 ஜூன் 2026, 8:15 am IST
ஒட்டுமா, விரிசல்? - பிடிஐ / சித்திரிப்பு
பகிர்:

நான்கு மாநில, ஒரு யூனியன் சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் காலத்தில், ஏப். 17 ஆம் தேதி, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி,  மகளிருக்கான இட ஒதுக்கீடு என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட மக்களவைத் தொகுதி மறுவரையறைக்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்த முன்வரைவை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தோற்கடித்தன.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் அஸ்ஸாமில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. கேரளத்தில் ஆளுங்கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்ட்களைத் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ‘தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தங்களுடன்’ நடைபெற்ற மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. புதுவையில் ஆளுங்கூட்டணியே மீண்டும் வென்றது – இவை எல்லாமே ஓரளவு எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள்தான்.

ஆனால், தமிழ்நாட்டில்... காங்கிரஸ், இடதுசாரிகளை உள்ளடக்கிய திமுக கூட்டணி (கிட்டத்தட்ட இந்தியா கூட்டணி!) மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கும் என்றே பெரும்பாலான கணிப்புகள் தெரிவித்தன; வெளித்தோற்றமும் இருந்தது. ஆனால், முடிவில் தனிப் பெரும்பான்மையான இடங்களை, திரையை விடுத்து அரசியல் கட்சி தொடங்கிப் போட்டியிட்ட, விஜய்யின் தவெக கைப்பற்றியது; சில நாள்கள் சுணக்கத்துக்குப் பிறகு திமுக அணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவுடன் ஆட்சியும் அமைத்தது.

Advertisement

Advertisement

தேர்தலில் கூட்டணி அமைவதற்கு முன்பு வரை காங்கிரஸில் ஒரு கோஷ்டியினர், ‘திமுக கூட்டணியில் காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும்; ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்க வேண்டும்’ என்றெல்லாம் கோரிக்கைகளை  எழுப்பிக் கொண்டிருந்தனர்; விஜய்யின் தவெகவுடன் அணி சேருவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டனர்; இதற்குக் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஆசிர்வாதமும் இருந்ததாகக் கூறப்பட்டது. எனினும், கடைசி நேரத்தில் காங்கிரஸுக்குப் போட்டியிட 28 தொகுதிகள், தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக இரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் எனக் கூட்டணி முடிவானது; கிறிஸ்டோபர் திலக் என்பவர் எம்.பி.யுமானார். ஆனால், தேர்தலில் வெறும் 5 தொகுதிகளில் மட்டும்தான் காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது. தவெக தனிப்பெரும்பான்மை பெற, திமுக இரண்டாமிடத்துக்குச் சென்றது.

திடீரென ஒரு ட்விஸ்ட். ஒரே நாளில் திமுகவைக் கழற்றி விட்டுவிட்டு, ஆதரவை அணி மாற்றித் தவெக பக்கம், சாய்ந்து அல்ல, பாய்ந்துவிட்டது காங்கிரஸ். காங்கிரஸின் இந்த முடிவால் லோக்கல் லாங்வேஜில் சொன்னால் திமுகவினர் – தலைவர்களும் சரி, தொண்டர்களும் சரி - ரொம்பவே காண்டாகிவிட்டார்கள். திமுக வாக்குகளுடன் வெற்றி பெற்றுவிட்டு, நன்றிகூட சொல்ல வராமல் போய்விட்டார்களே என்று கூறி கடும் அதிருப்தி. வழக்கம்போல பரஸ்பரம் வசவுகள்; உறவும் முறிந்தது. கூட்டணி ஆட்சி என்றறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (தேர்தல் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து அவர் மேடையேறவில்லை, தவிர்த்தார் அல்லது தவிர்க்கப்பட்டது).

தேர்தல் முடிவுகளுக்குப் பின் நாடு முழுவதும் எத்தனையோ பிரச்சினைகள். சிக்கலான அரசியல் - பொருளாதாரச் சூழல்கள். இந்த நிலையில்தான் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் வரும் 8 ஆம் தேதி, திங்கள்கிழமை  தில்லியில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவிப்பு வந்த உடனேயே, கூட்டணியில் வலுவான பங்கை வகித்த, திமுக அறிவித்துவிட்டது.

தொடக்கத்திலிருந்தே இந்தியா கூட்டணிக்கு மிகவும் பலமான ஆதரவு சக்தியாக இருந்தது திமுகவும் அதன் தலைவரான மு.க. ஸ்டாலினும். மற்றவர்கள் யாரும் – சொந்தக் கட்சிக்காரர்களே - சொல்ல முன்வராதபோது, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளர் என்று  வெளிப்படையாக அறிவித்தவரும்கூட.

ஆக, இந்தியா அணியின் இந்தக் கூட்டத்தில் யார், யாரெல்லாம் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தக் கூட்டணி வேண்டாமென ஏற்கெனவே வெளிப்படையாகவே அறிவித்து, வெளியேறிவிட்டது ஆம் ஆத்மி கட்சி.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டுத் தோற்ற சிவசேனையின் உத்தவ் தாக்கரே அணி வரலாம் என்கிறார்கள். தேசியவாத காங்கிரஸ் பங்கேற்கலாம். மேற்கு வங்கத்தில் தோல்விக்குப் பிறகு நடந்துகொண்டிருக்கும் குழப்பங்களுக்கு இடையே மமதா பானர்ஜியும், விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசத்தின் சமாஜவாதி ஜனதா கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், ஜம்மு- காஷ்மீரிலிருந்து தேசிய காங்கிரஸ் சார்பில் ஒமர் அல்லது பரூக் அப்துல்லாவும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணிக்குள் தமிழ்நாட்டிலிருந்து தவெகவைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தைத் தனியே அழைப்பார்களா? காங்கிரஸுடன் கேரளத்தில் எதிரெதிராக மோதிக்கொள்ளும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் மேற்கு வங்கத்தில் மோதிக்கொள்ளும் திரிணமூல் காங்கிரஸும் இந்தியா கூட்டணிக் கூட்டங்களில்  ஏற்கெனவே பங்கேற்று வந்திருக்கின்றன.

ஆனால், திமுகவோ, நாடாளுமன்றத்திலேயே இனிமேல் காங்கிரஸுடன் சேர்ந்து அமருவதில் அர்த்தமில்லை; எனவே, தனித்து அமரப் போவதாக அறிவித்துவிட்டது. ஆக, இனி எதிரணியில் திமுக ஒட்டுமா? தெரியவில்லை. திமுக கூட்டணியிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, மக்கள் நீதி மய்யம் போன்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

கடைசியாக இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம், மக்களவைத் தேர்தலுக்கு முன், கடந்த 2024, ஜூன் 1-ல் நடைபெற்றது. பின்னர், 2025 ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேர்தல் வாக்காளர் பட்டியல்களில் முறைகேடு, எஸ்ஐஆர் போன்றவற்றை விவாதிப்பதற்காக விருந்தொன்றை நடத்தினார் ராகுல் காந்தி.

அகில இந்திய அளவிலுள்ள கட்சி; அனைவருக்கும் தெரிந்ததான ஒரு முகம் என்கிற அளவில்தான் இப்போது ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தியின் தேவை இருக்கிறது. மற்றபடி பெரிய அளவில் மக்களைத் திரட்டிப்  போராட்டங்களை நடத்துவதிலோ, பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதில் முனைப்பான காரணிகளாக இருப்பார்கள் என்பதிலோ பெரிய நம்பிக்கையளிப்பதாகத் தோன்றவில்லை.

இந்தியா கூட்டணியில் சில மாநிலங்களைத் தவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் – தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் - ஒவ்வொரு பிராந்திய கட்சிகள்தான் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. காங்கிரஸ் கூடுதலாக சில மாநிலங்களில் செல்வாக்குப் பெற்றிருக்கிறது. தற்போது வெற்றி பெற்ற கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது.

கூட்டணிக்குள் – வலுவிழக்கச் செய்யக் கூடிய - எத்தகைய குழப்பங்களையெல்லாம் காங்கிரஸ் அரங்கேற்றும் என்பது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் கண்கூடாக வெளிப்பட்டது. ஏறத்தாழ இதே குழப்பத்தை அல்லது வேலையை, வெவ்வேறு பாணியில் செய்யாமல் இருந்திருந்தால் பிகாரிலும் மகாராஷ்டிரத்திலும்கூட காங்கிரஸால் கூட்டணிக்கு ஒருவேளை வெற்றியைத் தந்திருக்க முடியும்.

மகாராஷ்டிரத்தில் மும்பை பெருநகர்மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யாமல், கூட்டணியுடன் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், கைவிட்டுப் போனது. ஜம்மு - காஷ்மீரிலும் இதேபோன்ற கதைதான். உறவுகள் சரியில்லை; காங்கிரஸ் நம்பிக்கைக்குரியதாக நடந்துகொள்வதில்லை.

வெற்றியே பெற்றாலும்கூட என்ன பயன்? மாபெரும் வெற்றியை மக்கள் தந்தபோதிலும் உள்கட்சி கோஷ்டிப் பூசலைத் தாண்டி கேரளத்தில் ஒரு முதல்வரைத் தெரிவு செய்ய முடியாமல் காங்கிரஸ் எந்த அளவுக்கு, எத்தனை நாள்களுக்குத் திணறிக் கொண்டிருந்தது? தில்லியில் இருக்கும் ஒருவரைத் திணிப்பதற்காக என்னென்ன முயற்சிகள் செய்யப்பட்டன?கேரளத்தினர் உறுதியாக இருந்து தடுத்தேவிட்டனர். இவர்களுக்கு வாக்களித்த மக்கள் எந்தளவுக்கு நொந்து நூலாகியிருப்பார்கள்?

ஸேம் பின்ச். தமிழ்நாட்டில் திமுக ஆதரவுடன் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் சரி, தவெக தயவுடன் தேர்ந்தெடுக்கப்படவுள்ளவரும் சரி, தில்லித் தொடர்பில் இருப்பவர்கள் என்பதைத் தாண்டி, தமிழ்நாட்டு அரசியலில் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் என்பதாக உள்ளூர்க் காங்கிரஸ்காரர்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டிலுள்ள காங்கிரஸிலேயே எம்.பி.யாக வேண்டிய தகுதியுள்ளவர்கள் எவ்வளவோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நாடு தழுவிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்றென ஒருங்கிணைப்பாளராகவோ, தலைவராகவோ முன்னிறுத்தப்படுவோர், அதற்கான தகுதி நிலைக்கேற்ப பரந்த மனப்பாங்குள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக போன்ற கூட்டணிக் கட்சிகளிடம் இவர்கள் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கிற எந்த அரசியல் கட்சி, விருப்பத்துடன் முன்வந்து காங்கிரஸுடன் இணக்கமாகச் செயல்படும்? கூட்டணி வைத்துக்கொள்ளும்? ஆதரிக்கும்?

[தமிழ்நாட்டில் தவெகவுடன் பேசி மாநிலங்களவைக்குப் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளரான பிரவீண் சக்ரவர்த்தி, திடீரென, வெவ்வேறு காரணங்களுக்காக அரசை ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, அவராகவே ஓர் அணியை, ‘சமூகநீதி முற்போக்குக் கூட்டணி’யென உருவாக்கி ஆதரவு திரட்டுகிறார். உடனடியாக, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடுமையாக எதிர்வினையாற்றின. பிறகு இரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சென்று சந்தித்ததும் சால்வைகள் போர்த்திக்கொண்டதும் வேறு கதை].

என்றாலும், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் செயல்பாடுகள் நம்பிக்கையூட்டுவனவாக இருக்கின்றன. தோல்விக்குப் பின் கொல்கத்தாவுக்குச் சென்று மமதா பானர்ஜியைச் சந்தித்தார். திமுகவுடன் நிற்பதாகத் தெரிவித்ததுடன் கடினமான தருணங்களில் ஒருவரையொருவர் கைவிட்டுவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தொகுதி மறுவரையறை உத்தரப் பிரதேசத்துக்கு லாபமெனக் கருதப்பட்டபோதிலும் எதிர்த்து நின்றார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை, கல்வி மற்றும் மொழிப் பிரச்சினைகள், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினைகள் என நாட்டில் நிறைய இருக்கின்றன. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி தேர்வு குளறுபடிகள் என வேறு பல குழப்பங்களும்.

இத்தகைய சூழ்நிலையில் நாட்டில் - ஜனநாயகத்தில் வலுவான மாற்று – எதிர்க்கட்சி அல்லது எதிர் அணி என்பது மிக மிக அவசியம். இல்லாவிட்டால், கட்டுத்தளையோ, மூக்கணாங் கயிறோ இல்லாத காளையைப் போல கண்டமேனிக்கு ஆளும் அரசுகள் ஓடத் தொடங்குமானால் ஏதேனும் ஒருகட்டத்தில் எதிர்பாராத அல்லது எதிர்பார்த்த விபத்தில் சிக்க நேர்ந்துவிடும்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறபோது, இப்போதைய சூழ்நிலையில் ஆளுங்கூட்டணிக்கு மாற்றை உருவாக்க வேண்டிய இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் என்ன செய்யப் போகிறது? பரஸ்பரம் தங்களுக்குள் எத்தகைய நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பவிருக்கிறது? 

summary

Regarding Indi-alliance party leaders' meeting to be held on June 8th

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.