முகப்பு
சிறப்புச் செய்திகள்

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்!

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி...

Updated On : 8 ஜூன் 2026, 3:30 am IST
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
பகிர்:

கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், மதச் சிறுபான்மையினரின் வாக்குபலத்தை தன்னகத்தே கொண்டு, 135-இல் 80-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்று மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்ற தலைவராக அறியப்படும் சித்தராமையாவிடம் இருந்து வெளிப்படையான எதிர்ப்போ, மனக்கசப்போ இல்லாமல் முதல்வர் பதவியைப் பறித்திருக்கிறது காங்கிரஸ்.

25% வாக்குகளைக் கொண்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உச்சத் தலைவராக விளங்கும் சித்தராமையாவை அடிபணிய வைப்பதில் வெற்றிபெற்று, கர்நாடகத்தின் 25-ஆவது முதல்வராக டி.கே. சிவகுமார் பொறுப்பேற்றிருக்கிறார். இதன்மூலம், காங்கிரஸýக்கு மட்டுமல்ல, கர்நாடகத்தின் புதிய அரசியல் முகமாகவும் உருவெடுத்திருக்கிறார் டி.கே.சிவகுமார்.

கடந்த 20 ஆண்டுகால அரசியலைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த பி.எஸ். எடியூரப்பா, எச்.டி. குமாரசாமி, சித்தராமையா ஆகியோரிடமிருந்து அரசியல் களத்தை தனதாக்கிக் கொண்டுள்ள சிவகுமாருக்கு அடுத்த 2 ஆண்டுகால அரசியல் சுமுகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

Advertisement

Advertisement

அரசியல் சவால்கள்: அரசியல் செல்வாக்கு பெற்ற சித்தராமையாவை போல, காங்கிரஸில் எழும் உள்கட்சிப் பிரச்னைகளையும், பாஜக, மஜத எடுத்துவைக்கும் அரசியல் சவால்களையும் டி.கே. சிவகுமார் எப்படி சமாளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிக்கல்களைத் தீர்த்துவைப்பதில் வல்லவர் என்று அறியப்பட்ட டி.கே. சிவகுமார் எதிர்கொள்ளப்போகும் முதல் பிரச்னை, அமைச்சரவை விரிவாக்கம்.

34 பேர் இடம்பெறக் கூடிய அமைச்சரவையில் சிவகுமாரையும் சேர்த்து 14 பேர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதில், அதிகாரமும், பணமும் கைவரப்பெற்ற லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்த எம்.பி. பாட்டீல், சரணபிரகாஷ் பாட்டீல், ஈஸ்வர் கண்ட்ரே ஆகிய 3 பேரை அமைச்சராக்கியுள்ளார். அதேபோல, ஆதிக்கம் நிறைந்த ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த முதல்வராக டி.கே. சிவகுமார், கிருஷ்ணபைரே கெüடா, ராமலிங்க ரெட்டி; 23% வாக்கு பலம் கொண்ட பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த ஜி. பரமேஸ்வர், பிரியங்க் கார்கே, கே.எச். முனியப்பா, பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த பைரதி சுரேஷ், யதீந்திரா சித்தராமையா; பழங்குடி சமுதாயத்தின் சதீஷ் ஜார்கிஹோளி, கிறிஸ்தவ சமுதாயத்தின் கே.ஜே. ஜார்ஜ், முஸ்லிம் சமுதாயத்தின் யூ.டி. காதர் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், பிரதிநிதித்துவம் பெறாத சமுதாயங்களும், மாவட்டங்களும் அமைச்சரவையில் இடம்பெற காத்திருக்கின்றன. இந்த சவாலை சமாளிக்க தவறினால், அது 2028-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பெரும் சவாலாக மாறும். துறைகள் ஒதுக்கியதில் அதிருப்தி அடைந்த ராமலிங்க ரெட்டி, பதவியேற்ற 3 நாள்களிலேயே அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர், அவரை சமாதானப்படுத்தி அமைச்சரவையில் தொடர வைத்துள்ளனர்.

துணை முதல்வர் பதவி தரவில்லை, சரியான துறை ஒதுக்கவில்லை என்பதை அமைச்சர் கே.எச். முனியப்பா வெளிப்படுத்தியிருக்கிறார். இதேபோல, டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் மட்டுமல்லாது, சித்தராமையாவின் ஆதரவாளர்கள் பலரும் அமைச்சரவையில் கண்வைத்துள்ளனர்.

மாநில அரசியலில் தீவிரமாகச் செயல்படப் போவதாக சித்தராமையா அறிவித்திருக்கிறார். கட்சியிலும், ஆட்சியிலும் டி.கே. சிவகுமாருக்கு சித்தராமையா பெரும் சவாலாக இருக்கப்போகிறார். கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் தனது ஆதரவாளர்களுக்கு உரிய பங்கை பெற்றுத் தருவதில் சித்தராமையா தொடர்ந்து கவனம் செலுத்துவார். இது டி.கே.சிவகுமாருக்கு நெருடலாகவே இருக்கும்.

கட்சிப் பதவி, ஆட்சிப் பதவி என எதைக் கொடுத்தாலும், அதில் திருப்தி அடையாத, தொடர்ந்து போர்க்குரல் உயர்த்தும் தன்மை காங்கிரஸ்காரர்களுக்கு இயல்பாகவே வாய்க்கப்பெற்றது. அதை சமாளிப்பதில்தான் டி.கே. சிவகுமாரின் திறமை வெளிப்படும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் டி.கே. சிவகுமார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்ப்பதையே தனது வாழ்நாள் இலக்காக கொண்டவர் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.கே. ஹரிபிரசாத். மடாதிபதிகள், கோயில்கள், ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட டி.கே. சிவகுமாரும், அதற்கு நேரெதிர் சிந்தனை கொண்ட பி.கே. ஹரிபிரசாத்தும் இணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகமே!

தென்கர்நாடகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒக்கலிகர் சமுதாயத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றிருக்கும் மஜத, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. வடகர்நாடகத்தின் அரசியல் ஆளுமை பெற்ற சமுதாயமாக விளங்கும் லிங்காயத்துகளின் முழுமையான ஆதரவைப் பெற்றுள்ளது பாஜக. வடக்கிலும், தெற்கிலும் ஆதிக்கம் செலுத்தும் இருபெரும் சமுதாயங்களின் ஆதரவைப் பெறுவதற்கு டி.கே. சிவகுமார் கையாளும் வியூகம் என்ன என்பது தெரியவில்லை.

1983-இல் கர்நாடகத்தில் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத ஜனதா கட்சியின் ஆட்சியை அமைத்த ராமகிருஷ்ண ஹெக்டே, 1984-இல் நடந்த மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று தனது ஆட்சியைக் கலைத்தார். அதன்பிறகு, 1985-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது. இதன்பிறகு, கடந்த 41ஆண்டுகால கர்நாடக அரசியல் வரலாற்றில் எந்தக் கட்சியும் தொடர்ச்சியாக ஆட்சியைக் கைப்பற்றவில்லை.

ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், 2028-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று டி.கே.சிவகுமார் கூறியிருக்கிறார். இந்தக் கனவை நனவாக்க பாஜக மற்றும் மஜத கூட்டணியை வீழ்த்த வேண்டும். அதற்கு காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பிரச்னையை கட்டுக்குள் வைத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை முறியடிப்பதோடு, மக்கள் செல்வாக்கையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

அதற்கு முன்பு, ஆக. 31-ஆம் தேதிக்குள் 5 மாநகராட்சிகளைக் கொண்ட கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு நடைபெறவுள்ள முதல் தேர்தல் என்பதோடு, டி.கே. சிவகுமார் முதல்வரான பிறகு நடைபெறும் முதல் தேர்தலும்கூட. இத்தேர்தலில் வெற்றி பெறுவது டி.கே. சிவகுமாரின் அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்யும்.

2028-இல் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகும் கனவில் இருக்கிறார் டி.கே.சிவகுமார். கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் தேர்தலை தொடர்ந்து நடக்கவிருக்கும் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அதற்கு, தான் சார்ந்திருக்கும் ஒக்கலிகர் சமுதாயத்தின் வாக்குகள் மட்டுமல்லாது, வடகர்நாடகத்தில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்து, 23% பலம் கொண்ட பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், மதச்சிறுபான்மையினரின் ஆதரவும் டி.கே. சிவகுமாருக்குத் தேவைப்படுகிறது.

ஒக்கலிகர் சமுதாயத்தின் தலைவராக மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கன்னடர்களின் தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள டி.கே. சிவகுமார் முயற்சி மேற்கொண்டிருக்கிறார். அது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று சொல்ல முடியவில்லை.

காங்கிரஸின் சவால்கள்: 2007, 2008, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் ஆட்சி அமைத்த பாஜக, ஒருமுறைகூட அறுதிப் பெரும்பான்மை பலத்தை பெறவில்லை. மாறாக, மஜத அல்லது சுயேச்சைகள், மாற்றுக் கட்சியினரின் ஆதரவுடன்தான் ஆட்சி நடத்தியது. தென்கர்நாடகத்தில் ஒக்கலிகர் சமுதாயத்தின் வாக்குகளைப் பெற முடியாததுதான், இதற்கு மிக முக்கியமான காரணம்.

இதை உணர்ந்த பாஜக, 2024 மக்களவைத் தேர்தலில் மஜதவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 5 வாக்குறுதி திட்டங்களை திறம்பட அமல்படுத்தியபோதும், ஆளும் காங்கிரஸ் கட்சியால் 28-இல் 9 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ஆனால், பாஜகவும் மஜதவும் கூட்டணி அமைத்து 19 இடங்களைப் பிடித்தன. இதனால், அச்சமடைந்துள்ள காங்கிரஸ், 2028 பேரவைத் தேர்தலில் பாஜக மஜத கூட்டணியை வீழ்த்துவதற்கு கையில் எடுத்திருக்கும் துருப்புச்சீட்டுதான் ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த டி.கே. சிவகுமார்.

கட்சியின் மாநிலத் தலைவராக பி.கே. ஹரிபிரசாதை நியமித்திருப்பதன் மூலம் 2028-இல் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற காங்கிரஸ் வியூகம் அமைத்துள்ளது. இதற்கு டி.கே. சிவகுமார் தலைமையிலான ஆட்சி கைகொடுக்குமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

ஆட்சியின் சவால்கள்: 2026-27 நிதியாண்டில் 5 வாக்குறுதித் திட்டங்களுக்காக ரூ. 51,286 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை முதல்வர் டி.கே. சிவகுமார் அறிவித்திருக்கிறார்.

இதனால் ஏற்படும் நிதிச்சுமைகளை சமாளித்து, வளர்ச்சிப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கும் பெரும் சவால் டி.கே.சிவகுமாருக்கு காத்திருக்கிறது. கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் தேர்தல் நடக்கவிருப்பதால், பெங்களூரு வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பின் அறிக்கை சித்தராமையாவிடம் அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு உச்சவரம்பை 32 சதவீதத்தில் இருந்து 51-ஆகவும், இஸ்லாமியர்களுக்கு 8 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் பரிந்துரை வழங்கியுள்ளது. இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்தினால், ஒக்கலிகர், லிங்காயத்து சமுதாயத்தின் கோபத்துக்கு சிவகுமார் ஆளாக நேரிடும்.

இப்படி பற்பல சவால்களுடன் தனது புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் டி.கே. சிவகுமார். காலத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறது அவரது ஆட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.