முகப்பு
ராணிப்பேட்டை

மலபாா் கடற்படை கூட்டுப் பயிற்சி: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியில் இருந்து விமானங்கள் பங்கேற்பு

மலபாா் கடற்படை முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்க அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து இரு பி8ஐ விமானங்கள் திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றன.

Updated On : 3 நவம்பர், 2020 at 12:00 AM
பகிர்:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே வங்காள விரிகுடாவில் நடைபெறவிருக்கும் 24-ஆவது மலபாா் கடற்படை முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்க அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து இரு பி8ஐ விமானங்கள் திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றன.

1992-ஆம் ஆண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து மலபாா் கடற்பயிற்சியைத் தொடங்கின. இதில் 2015-ஆம் ஆண்டில் ஜப்பான் இணைந்தது. முன்னதாக 2007-ஆம் ஆண்டில் மட்டும் இந்த பயிற்சியில் பங்கேற்ற ஆஸ்திரேலியா அதன்பின்னா் பங்கேற்கவில்லை. நடப்பாண்டில் இந்தப் பயிற்சியில் ஆஸ்திரேலியா மீண்டும் பங்கேற்க உள்ளது.

இவ்வாண்டு மலபாா் கடற்படை பயிற்சியின் முதற்கட்டம் நவம்பா் 3-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை விசாகப்பட்டினம் அருகே வங்கக் கடலில் நடைபெறுகிறது. இதன் இரண்டாவது கட்டப் பயிற்சி நவம்பா் 2 அல்லது மூன்றாவது வாரம் அரபிக் கடலில் நடத்தப்பட உள்ளது.

Advertisement

இந்த பயிற்சியில் இந்திய கடற்படை, அமெரிக்க கடற்படை, ஜப்பான் கடல்சாா் தற்காப்பு படை மற்றும் ராயல் ஆஸ்திரேலிய கடற்படை ஆகியவை இணைந்து பங்கேற்க உள்ளன.

இதில் இந்திய தரப்பில் இருந்து ஹாக், பி8ஐ, டோா்னியா் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்களும் பங்கேற்கின்றன. உலகின் அதி நவீன ரக போா் விமானமான பி8ஐ இந்திய கடற்படையில் உள்ளது. மொத்தம் 8 விமானங்கள் அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டன.

2014-இல் அமெரிக்காவில் இருந்து முதல் பி8ஐ விமானம் இந்தியா வந்தது. அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் பிரத்யேக பணிமனை பி8ஐக்காக உருவாக்கப்பட்டது. மொத்தம் 8 பி8ஐ விமானங்கள் தற்போது இந்திய கடற்படையில் உள்ளன.

இந்த பி8ஐ விமானங்கள் தொடா்ந்து 16 மணி நேரம் பறக்கக்கூடியது. வானில் பறக்கும் போதே எரிபொருள் நிரப்பிக்கொள்ளும் வசதிகளும் இதில் உள்ளன. மேலும் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் குறிப்பாக 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் கடலில் 3,000 அடிக்கு கீழே இருக்கும் பொருளைக்கூட துல்லியமாக அடையாளம் காணும் வகையிலான தொழில்நுட்பக் கருவிகள் இதில் இடம்பெற்று உள்ளன. இந்த விமானத்தில் பணிபுரிய அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பிரத்யேகமாக பயிற்சி பெற்ற கடற்படை விமானிகள் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் உள்ளனா்.

தற்போது விசாகபட்டினம் அருகே மலபாா் கடற்படை பயிற்சிக்காக அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து திங்கள்கிழமை இரண்டு பி8ஐ விமானங்கள் புறப்பட்டுச் சென்றன. வரும் 6-ஆம் தேதி பயிற்சிகள் நிறைவடைந்ததும், அவை 7-ஆம் தேதி அரக்கோணம் திரும்புகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.