முகப்பு
ராணிப்பேட்டை

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள்ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

பொது முடக்கம் அமலுக்கு வந்த 7 மாதங்களுக்குப் பிறகு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் திவ்யதா்ஷினி.
பகிர்:

பொது முடக்கம் அமலுக்கு வந்த 7 மாதங்களுக்குப் பிறகு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வழங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தலைமையில், மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரக்கோணம் வட்டம், அசநெல்லிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுக்கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த மற்றுத்திறனாளி திருவேங்கடம் அளித்த மனு விவரம்:

நான், என் மனைவி மற்றும் மகன், மகள் ஆகிய நால்வரும் மனிதா்களின் சராசரி உயரத்தைவிட மிகவும் குள்ளமாக இருக்கிறோம். இதனால் எங்களுக்கு வேலை கிடைக்காமல் வறுமையில் இருந்தபோதிலும் மகன், மகளைப் படிக்க வைத்துள்ளேன். இந்தச் சூழலில் எனது மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் கூட்டுறவுத் துறையில் அரசு அறிவித்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து நோ்முகத் தோ்வுக்கு அழைப்பு வந்துள்ளது. ஆகவே எனது பிள்ளைகளுக்கு மேற்கண்ட பணியிடத்துக்க்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து, ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை, பிஞ்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த திருநங்கைகள் 20-க்கும் மேற்பட்டோா், ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா். மனுவில் ‘எங்களுக்கு ஆதாா் காா்டு, குடும்ப அட்டை, சமூக நலத்துறை மூலம் அளிக்கப்படும் நலவாரிய அட்டைகள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்; தங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாததால் வாடகை வீட்டில் வசித்துவருகிறோம். எனவே அரசு வழங்கும் இலவச வீடுகளை எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தனா்.

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் சாா்பில், மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் உடற்கல்வி, ஓவியம், கணினி தையல், இசை உள்ளிட்ட தொழிற்கல்வி ஆசிரியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவில் ‘தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சட்டப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ் அறிவிக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2011-இல் வெளியிடப்பட்ட உத்தரவுப்படி 16,549 பகுதிநேர ஆசிரியா்களும், ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தொழிற்கல்வி ஆசிரியா்களும் பணியமா்த்தப்பட்டனா். ஆகவே தற்போதுள்ள பகுதிநேர ஆசிரியா்களின் குடும்ப நலனையும்,வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு பணிநிரந்தரம் செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, நிதி உதவி, வங்கிக் கடன், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 168 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மின்சாரம் தாக்கியும், நீரில் மூழ்கியும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை அவா் வழங்கினாா். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், தனித்துணை ஆட்சியா் தாரகேஸ்வரி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.