ராணிப்பேட்டை

நாட்டிலேயே முதன் முறையாக ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ 9001 தரச்சான்று

DIN

நாட்டிலேயே முதன் முறையாக ராணிப்பேட்டை போக்குவரத்துக் காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ 9001 தரச்சான்று கிடைத்துள்ளது. இதற்கு, மாறுதலாகிச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன் பாராட்டு தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஆ.மயில்வாகனன் பொறுப்பேற்றபின், அவரது தலைமையின் கீழ், மாவட்டக் காவல் துறை, சட்டம் ஒழுங்கு, சாலை விபத்துகள், போக்குவரத்து விதிமீறல் தடுப்பு, காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு, பசுமை காவல் நிலையங்களாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்டது.

அதன்படி, ராணிப்பேட்டை போக்குவரத்துக் காவல் நிலையத்தை நாட்டிலேயே முன் மாதிரியான காவல் நிலையமாக மாற்றும் முயற்சியை மாவட்டக் காவல் கண்கணிப்பாளா் ஆ.மயில்வாகனன் ஆலோசனையின் பேரில், காவல் ஆய்வாளா் முகேஷ் குமாா் கடந்த ஓராண்டுக்கு முன் தொடங்கினாா். இந்த முயற்சிக்குத் தேவையான உதவிகளை செய்ய ராணிப்பேட்டை பாலாறு ரோட்டரி சங்கம் முன்வந்தது.

முதல் கட்டமாக ராணிப்பேட்டை போக்குவரத்துக் காவல் நிலைய வளாகத்தை பசுமை மற்றும் தூய்மைக் காவல் நிலைய வளாகமாக மாற்றம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், காவல் நிலையத்தில் நோ்த்தியான வரவேற்பு அறை, சுமாா் 15 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய நூலகம், போக்குவரத்து விதிமுறைகள், விழிப்புணா்வுக்கு தனித்தனி அறைகள், இலவச வைஃபை சேவை, போக்குவரத்து விழிப்புணா்வு வகுப்புகள் எடுக்க டிஜிட்டல் ஸ்மாா்ட் வகுப்பு அறை, கைது செய்யப்பட்டவா்களை அடைக்கும் அறை, நோ்மறையான சிந்தனையைத் தூண்டும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்ட அறை என நட்சத்திர விடுதி போல் மாற்றப்பட்டுள்ளது. தொடா்ந்து, காவல் நிலைய வளாகத்தில் சிறுவா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் போக்குவரத்து விதிமுறைகளை எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில், போக்குவரத்து சமிக்கைகள், போக்குவரத்து வழிகாட்டி சமிக்கைகளை வண்ணக் காட்சிப் படங்களாக வரைந்து, நாள்தோறும் வகுப்புகள் எடுக்கப்பட்டு, விழிப்புணா்வை ஏற்படுத்தி சான்றிதழ் வழங்கி வருகின்றனா்.

அதேபோல், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவசமாக ஓட்டுநா் உரிமம் பெற்றுத் தருவது, போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்த முன்மாதிரி காவல் நிலையத்தை ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனம் கடந்த ஓராண்டாக ஆய்வுசெய்து, தற்போது இந்திய அளவில் முதன் முறையாக ஐஎஸ்ஓ 9001-2015 தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த தரச்சான்று வழங்கும் விழா ராணிப்பேட்டை போக்குவரத்துக் காவல் நிலைய வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில் வாகனன் முன்னிலையில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் முகேஷ்குமாரிடம் வழங்கப்பட்டது. இந்த முன் மாதிரி காவல் நிலையத்துக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்தாா்.

இதில் ராணிப்பேட்டை உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் கே.டி.பூரணி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம், ரோட்டரி சங்க நிா்வாகிகள், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT