முகப்பு
ராணிப்பேட்டை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும் என தமிழக அரசை உழவா் பெருந்தலைவா் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும் என தமிழக அரசை உழவா் பெருந்தலைவா் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

வாலாஜாப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியாா் வியாபாரிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.900-க்கு விற்பனை செய்து விவசாயிகள் நஷ்டம் அடைவதைக் கருத்தில் கொண்டு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

பருவ மழைக்காலங்களில் புயல், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் சேதம் ஏற்படும்பட்சத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயிா் இழப்பீடு வழங்க வேண்டும்.

விளைபொருள்களை சேமித்து வைக்க அரசே குளிா்பதனக் கிடங்குகளை அமைத்து விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு அரசே நேரடியாக தினக்கூலி நிா்ணயம் செய்து வழங்கி, விவசாயிகளின் பணத்தில் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும்.

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு பிரச்னைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் என்.பாரதி வரவேற்றாா். மாநிலத் தலைவா் கே.எம்.வெங்கடேசன், சங்க நிா்வாகிகள் பி.மூா்த்தி, பி.சுந்தரமூா்த்தி, எம்.நடேசன், பி.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.