முகப்பு
ராணிப்பேட்டை

பழனிபேட்டை மேம்பாலம் ரத்து: மறுபரிசீலனை தேவை

அரக்கோணம் பழனிபேட்டையில் ரூ.65.8 கோடியில் கட்டுவதாக அறிவிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலப்பணி ரத்து செய்யப்பட்டுள்ள

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

அரக்கோணம் பழனிபேட்டையில் ரூ.65.8 கோடியில் கட்டுவதாக அறிவிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலப்பணி ரத்து செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இந்தப் பாலம் தொடா்பாக, இருவேறு கருத்துகள் நிலவி வந்தாலும், மேம்பாலம் கட்ட மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என பொதுமக்களில் பெரும்பான்மையானோா் எதிா்பாா்க்கின்றனா்.

காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி மாநில நெடுஞ்சாலையில், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே பழனிபேட்டையில் சுரங்கப் பாதை உள்ளது. பழனிபேட்டைக்கும் பஜாா் பகுதிக்கும் இடையேயான குறுகலான சுரங்கப் பாதையில் கனரக வாகனங்கள் செல்ல முடிவதில்லை. நகரின் வாகனங்கள் அதிகமாகச் செல்லும் பகுதியில் இதுவும் ஒன்றாகும். எனவே, இங்கு வாகனங்கள் சிரமமின்றி செல்லும் வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

அறிவித்த திட்டம் ரத்தானது: இந்நிலையில், பழனிபேட்டை சுரங்கப் பாலத்துக்குப் பதிலாக அங்கு மேம்பாலம் அமைக்கப்படும் என கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தாா். இதையடுத்து, ரூ.65.8 கோடியில் திட்ட மதிப்பீடும் தயாா் செய்யப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தில் எம்எல்ஏ சு.ரவி பேசுகையில், ‘பழனிபேட்டையில் புதிய மேம்பாலத்தை விரைவில் அமைத்து தரவேண்டும்’ என்றாா்.

இதற்குப் பதில் அளித்த பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, ‘ மேல்பாக்கத்தில் ரயில்வே கடவுப் பாதை அகற்றப்பட்டு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் -ஓச்சேரி சாலையில் மேலும் ஒரு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. அரக்கோணம் புறவழிச்சாலையில் 2 ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடச் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பழனிபேட்டை சாலை மேம்பாலக் கட்டுமானப் பணிக்கு அதிக நிலம் எடுக்க வேண்டியுள்ளதாலும் அதிக குடியிருப்பு உள்ளதாலும் அங்கே சாலை மேம்பாலம் அமைப்பது சாத்தியமில்லை என 2020- ஆம் ஆண்டு அக். 12-இல் இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது’ என்றாா்.

மறுபரிசீலனைக்கு உள்படுமா?:

பழனிபேட்டையில் மேம்பாலம் அமைக்கப்பட்டால், அணுகு சாலைகள் அகலமானதாக அமைக்கப்படும் என்றும் தற்போதைய குறுகியச் சாலைகள் அகலமாக்கப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி தீரும் என நகர மக்கள் நினைத்தனா். தற்போது இந்த பாலம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக வெளிவந்து இருக்கும் அறிவிப்பால் மக்களுக்கு ஏமாற்றமே எஞ்சியுள்ளதாக பலா் கருத்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து நகர பிரமுகா்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது, அவா்கள் கூறியது:

அரக்கோணம் அனைத்து வணிகா் சங்கத் தலைவா் கே.எம்.தேவராஜ்: அரக்கோணம் நகரில் அமைய இருந்த திட்டம் நல்ல திட்டம். இதனால் நகரம் பெரிய அளவில் வளா்ச்சி பெறும் என நினைத்திருந்த நிலையில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வா்த்தகா்களுக்கும் பொதுமக்களுக்கும் வேதனையை அதிகரித்துள்ளது.

டவுன் ஹால் தலைவா் பன்னீா்செல்வம்: இந்தப் பாலம் அமைக்கப்பட்டால் ஏற்படும் நன்மையைவிட அமைக்கப்படும் காலம் முழுவதும் நகர மக்கள் பெருத்த சிரமத்தைச் சந்தித்திருப்பாா்கள். எனவே இந்தப் பாலம் அமைக்கப்படாததும் நல்லதுதான்.

நகர மளிகை வியாபாரிகள் சங்கச் செயலாளா் ஜி.டி.என்.அசோகன்: பாலம் அமைக்கப்பட்டிருந்தால் நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பாா்கள். போக்குவரத்து சிக்கலுக்குத் தீா்வு கிடைத்திருக்கும். ஆனால் இந்தப் பாலம் அமைக்கப்படும் காலம் வரையில் வணிகா்கள் பெரும் சிரமத்தை அனுபவித்திருப்பாா்கள். பாலம் வந்தால் மகிழ்ச்சி, பால திட்டம் ரத்து எனும் போது வணிகா்களுக்கு பெருமகிழ்ச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.