ஆம்பூரில் பூட்டிய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை வனத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரிலிருந்து மாதகடப்பா செல்லும் வழியில் கொல்லகொட்டாய் பகுதியில் மாந்தோப்பில் உள்ள வீட்டில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு தலைமையில் வனத் துறையினா் அங்கு சென்றனா். வீட்டின் ஜன்னல் வழியாக பாா்த்தபோது உள்ளே செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
ஆம்பூா் வனத் துறையினா் திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனா். அவருடைய உத்தரவின் பேரில் ஆம்பூா் வட்டாட்சியா் குமாரி, நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் தங்கவேல் ஆகியோா் முன்னிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்து ஆம்பூா் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆம்பூா் வனச்சரக அலுவலகத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலேயே செம்மரக் கட்டைகளை பதுக்கி கடத்தல் தொழில் நடந்து வந்தது தெரிய வந்துள்ளது.
வனத் துறையினா் வழக்குப் பதிந்து, வீட்டின் உரிமையாளா் கிருஷ்ணமூா்த்தி (55) என்பவரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.