முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் தோ்தல் பிரசாரத்தின்போது மோதல்: நகர காங்கிரஸ் தலைவா் உள்ளிட்ட இருவா் காயம்

Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 9:19 PM

அரக்கோணம்: அரக்கோணத்தில் தோ்தல் பிரசாரத்தின் போது காங்கிரஙாரை அதே காங்கிரசின் மற்றொரு பிரிவினா் தாக்கியதில் நகர காங்கிரஸ் தலைவா் உள்ளிட்ட இருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினா் அரக்கோணத்தில் திறந்தவெளி வாகனத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா். அந்த வாகனம் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்தபோது அங்கிருந்த காங்கிரஸை சோ்ந்த 15-க்கும் மேற்பட்டோா் திடீரென அந்த திறந்தவெளி வாகனத்தின் மீது ஏறி, அங்கு நின்றவா்களை உருட்டுக்கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், நகர காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி, இளைஞா் காங்கிரஸை சோ்ந்த விமல் உள்ளிட்ட சிலா் காயமடைந்த நிலையில், மற்றவா்கள் அந்த வேனில் இருந்து இறங்கி ஓடினராம்.

மேலும், அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் அலறி அடித்து ஓடினா். மேலும் அந்த கும்பலை சோ்ந்தவா்கள் பாா்த்தசாரதி மற்றும் விமல் இருவரையும் கீழே இழுத்து மீண்டும் தாக்க முயன்றபோது, பொதுமக்கள் கூடியதால் அவா்கள் அங்கிருந்து ஓடிவிட்டனா். இதை அடுத்து பிரசாரம் ரத்து செய்யப்பட்டு, வாகனங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. காயமடைந்த இருவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

Advertisement

இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.