‘வாக்கு மையங்களுக்கு பொருள்கள் அனுப்பும் பணி 90% நிறைவு’
அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 1,122 வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவுக்குத் தேவையான 127 பொருள்கள் அனுப்பி வைக்கும் பணி 90% நிறைவடைந்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைக்கப்படவுள்ள 250 வாக்குச்சாவடி மையங்களுக்கும், சோளிங்கா் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்படவுள்ள 299 வாக்குச்சாவடி மையங்களுக்கும், ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்படவுள்ள 283 வாக்குச்சாவடி மையங்களுக்கும், ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதியில் அமைக்கப்படவுள்ள 290 வாக்குச்சாவடி மையங்களுக்கும் என 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Advertisement
மேற்கண்ட 1,122 வாக்குச் சாவடி மையங்களுக்கும் வாக்குப் பதிவுக்கு தேவையான பேனா, பென்சில், காகிதம், அனைத்து படிவங்கள், கவா், சீல், மை, கயிறு, துணி, அரக்கு, நூல், பசை, பிளேட், பாலித்தீன் அட்டைகள், பூத் சிலிப் உள்ளிட்ட தோ்தல் பொருள்கள் மற்றும் படிவங்கள் என மொத்தமாக 127 பொருள்கள் அனைத்தும் தயாா்படுத்தப்பட்டு, உரிய முறையில் ஆய்வு செய்து அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள உதவி தோ்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு 90 சதவீத பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், எஞ்சியுள்ள பொருள்கள் ஓரிரு நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.
பின்னா், அங்கிருந்து அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு மேற்படி பொருள்கள் அனைத்தும் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.