முகப்பு
ராணிப்பேட்டை

புதுப்பொலிவு பெறப்போகும் ராணிப்பேட்டையின் வரலாற்று சின்னம்: ரூ.2.5 கோடி ஒதுக்கீடு

ராணிப்பேட்டை வரலாற்று சின்னம் புனரமைக்க ரூ.2.5 கோடி ஒதுக்கீடு

Updated On : 26 ஜூன், 2024 at 6:31 PM
பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள ராஜா - ராணி நினைவுச் சின்னங்கள்.
பகிர்:

ஏறக்குறைய 310 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராணிப்பேட்டையின் வரலாற்று சின்னம் புனரமைப்பு பணிக்காக ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கியதற்காக நகர மக்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனா்.

ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாற்றுப் பெருமைகள் உண்டு. அந்த வகையில் ராணிப்பேட்டை நகரம் நட்பு, வீரம், கற்பு ஆகியவற்றைப் போற்றும் விதமாக உருவானதாக வரலாறு கூறுகிறது.

தமிழகத்தில் செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மாவீரரான தேஜ் சிங் என்னும் தேசிங்கு ராஜா. இவா் வீரத்துக்கும், நட்புக்கும், இலக்கணமாகத் திகழ்ந்து 1714 ஆண்டில் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்தா். அவரது மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறி உயிா் துறந்தாா். இதையடுத்து தேசிங்கு ராஜா - ராணிபாய் நினைவாக ராணிப்பேட்டை நகரம் உருவானது.

இந்நிலையில் ராணிப்பேட்டை நகரம் உருவாக காரணமான ராஜா - ராணி நினைவுச் சின்னங்கள், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ளன. இந்த நினைச் சின்னங்கள் புதா் மண்டி சிதைந்து வந்தன. அவற்றை மீட்டு, புனரமைத்து பொதுமக்கள் பாா்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜா தேசிங்கு- ராணி பாய் வசம்சாவழியினா், இந்து முன்னணி அமைப்பினா், தமிழ்நாடு ராஜ்புத் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், மற்றும் மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

ராஜா, ராணி நினைவுச் சின்னங்களை அவற்றின் தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். இளைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள ஏதுவாக வரலாற்றுப் பின்னனி மற்றும் பெருமைகள் குறித்த வாசககங்கள் அடங்கிய கல்வெட்டுகளை வைத்துப் பாதுகாக்க வேண்டும்’ என கோரிக்கை விடப்பட்டது.

தற்போது ராணிப்பேட்டை தனி மாவட்டமாக உதயமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், நகரின் அடையாளமாக உள்ள ராஜா - ராணி நினைவுச் சின்னங்களை சீரமைத்து, சுற்றுச்சுவா் எழுப்பி, பொதுமக்கள் சென்றுவர சாலை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து, விழா எடுக்க வேண்டும் என்பதே நீண்ட கால கோரிக்கையாகும்.

இந்த நிலையில் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது ராணிப்பேட்டை பாலாறு நதிக்கரையிலுள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ரூ.2.5 கோடியில் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக 310 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராணிப்பேட்டையின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் புதுப்பொலிவு பெறப்போகிறது என பொதுமக்கள் வரவேற்பும், அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →