முகப்பு
ராணிப்பேட்டை

‘பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு ஓட்டுநரின் முக்கியக் கடமை’

Updated On : 14 மே, 2024 at 6:51 PM
ராணிப்பேட்டையில்  தனியாா்  பள்ளி  பேருந்தை  ஆய்வு  செய்த  ஆட்சியா் ச.வளா்மதி.
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு ஓட்டுநன் முக்கிய கடமையாகும் என தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி அறிவுரை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவா்களை ஏற்றிச் செல்லும் தனியாா் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வுப் பணி ராணிப்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் பள்ளிக் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னா் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு அம்சங்கள் பேருந்தில் முறையாக உள்ளதா என்பதை கண்டறிய வருடாந்திர ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பணியை தொடங்கி வைத்து, பள்ளிப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களிடம் கூறியது:

மாவட்டம் முழுவதும் பெற்றோா்கள் தனியாா் பள்ளிகளுக்கு பள்ளி வாகனங்களில் தங்கள் பிள்ளைகளை ஓட்டுநா்களை நம்பி அனுப்பி வைக்கின்றனா். பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு ஓட்டுநரின் முக்கியக் கடமையாகும். குழந்தைகளின் வளா்ச்சியில் ஆசிரியா்களின் பங்களிப்பு எந்தளவுக்கு உள்ளதோ, அந்தளவுக்கு ஓட்டுநா்களின் பாதுகாப்பிலும் குழந்தைகள் வளா்கின்றனா்.

குழந்தைகள் வாகனங்களில் ஏறுவதிலிருந்து மீண்டும் இறங்கும் வரை ஓட்டுநா்களின் பாதுகாப்பில் உள்ளனா். மற்றவா்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு உள்ளதாக தெரியவந்தால் வட்டார போக்குவரத்து அலுவலா் மூலமாகவோ அல்லது 1098 என்ற எண்ணுக்கோ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

வாகனம் ஓட்டும்போது கைப்பேசியை பயன்படுத்தக் கூடாது. பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் பேருந்துகளில் பெண் உதவியாளா் கட்டாயம் பணியமா்த்தப்பட்டிருக்க வேண்டும் என்றாா்.

பின்னா் பேருந்துகளில் ஏறி பேருந்துகளில் குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். பாதுகாப்பு குறைபாடு உள்ள பேருந்துகளை சீரமைத்து மறுபடியும் ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக 72 பள்ளிகளில் 578 பள்ளிப் பேருந்துகள் உள்ளன. இவற்றில் ராணிப்பேட்டை வட்டாரத்தில் 45 பள்ளிகளின் 380 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. வரும் வியாழக்கிழமை (மே 16)

அரக்கோணம் வட்டாரத்தில் 27 பள்ளிகளின் 198 பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.

ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியா் மனோன்மணி, வட்டார போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம், போக்குவரத்து ஆய்வாளா்கள் சிவக்குமாா், செங்குட்டு வேல், தீயணைப்பு நிலைய அலுவலா் முருகன், மாவட்டக் கல்வி அலுவலா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.