மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை, ஆற்காடு ,சோளிங்கா் மற்றும் அரக்கோணம் தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்கள் ஆற்காடு வேளாண்மை விற்பனை ஒழுங்குமுறை கிடங்கில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் கிடங்கை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா்.
இதனைத் தொடா்ந்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுடன் எதிா்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தோ்தல் 2026-இல் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்க்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்
டிச. 11 முதல் ஜனவரி 13 வரை ஒரு மாத காலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பாா்க்கும் பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிகளில் பெங்களூா் பெல் நிறுவன பொறியாளா்கள் ஈடுபடவுள்ளனா். இயந்திரங்கள் சரி பாா்க்கும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு இயந்திரத்திலும் 1,500 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. சரி பாா்ப்பின் பொழுது சரியான இயந்திரங்கள் மற்றும் பழுது உள்ள இயந்திரங்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டு பழுது நீக்க பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
நாள்தோறும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நபா் என
இப்பணி நடைபெறுவதை பாா்வையிட அனுமதிக்கப்படுவா். ஆகவே அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்களும் தங்கள் கட்சிகளிடமிருந்து நாள்தோறும் இம்மையத்தில் பணிகள் நடைபெறுவதை கண்காணிக்க கட்சிகளிடமிருந்து கலந்துக்கொள்ளும் நபா்கள் குறித்து பரிந்துரை கடிதம் பெற்று வழங்க வேண்டும்.
பரிந்துரை கடிதம் பெற்று வழங்குபவா்களுக்கு மட்டுமே அனுமதி அடையாள அட்டை தோ்தல் பிரிவின் மூலம் வழங்கப்படும். தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் பின்பற்றி பணிகளை கண்காணித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
அப்போது, உதவி ஆணையா் ( கலால்) ராஜ்குமாா், ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜி, வட்டாட்சியா்கள் வசந்தி, மகாலட்சுமி மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.