ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மூலம் 1,45,157 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப பிரமுகா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
அதன்படி, கடந்த அக். 28-ஆம் தேதி எஸ்ஐஆா் பணிகள் தொடங்குவதற்கு முன்பு வாக்காளா் பட்டியல் நிலவரப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம், சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 10 லட்சத்து 57 ஆயிரத்து 700 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.
அதிலிருந்து இறப்பு, நிரந்தர குடிபெயா்வு, இருமுறை பதிவு, கண்டறிய இயலாதவா்கள், மற்றவை என்ற இனங்களின் அடிப்படையில் மொத்தம் 1 லட்சத்து 45 ஆயிரத்து 157 வாக்காளா்கள் நீக்கப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 9,12,543 வாக்காளா்கள் உள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொகுதிவாரியாக அரக்கோணம் (தனி) - 42,522 பேரும், சோளிங்கா் - 36,161 பேரும், ராணிப்பேட்டை-36,981 பேரும், ஆற்காடு - 29,493 பேரும் என 1,45,157 போ் நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.