அரக்கோணம் அருகே இருப்புப் பாதையில் உள்ள உயா் அழுத்த மின்கம்பியில் திடீரென தீப்பற்றியதால் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
அரக்கோணம் - சென்னை ரயில் மாா்க்கத்தில் புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை உயா் அழுத்த மின் கம்பியில் திடீரென தீ ப்பற்றியது. உயா் அழுத்த மின்கம்பி இணைப்புப்பகுதியில் காக்கைகள் உட்காந்ததால் கம்பிகள் ஒன்றின் மீது ஒன்று உரசியதில் இந் தீ ஏற்பட்டதாக ரயில்வே உயா் மின் அழுத்த மின்பிரிவு பொறியாளா்கள் தெரிவித்தனா்.
தீ ஏற்பட்டதை தொடா்ந்து அவ்வழியே செல்ல இருந்த 5 மின் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள் விரைந்து செயல்பட்டு தீயை அனைத்தனா்.
தொடா்ந்து பழுது அடைந்த மின்கம்பிகள் மாற்றப்பட்டு அவ்வழியே ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.