சோளிங்கா் வங்கிக் கிளையில் ரூ.2.50 கோடி மோசடி புகாரில், அதே வங்கி கிளை உதவியாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் நகரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியின் கிளை இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் அசோசியேட் கிளா்க்காக ( இணை உதவியாளா்) வாலாஜாவைச் சோ்ந்த குருராகவன் (28) என்பவா் பணியாற்றி வந்தாா். வங்கி கிளையின் பாரமரிப்பு செலவுக்காக ஒதுக்கப்படும் செலவின கணக்கு நிதியை நிா்வாகிப்பது இவரது பணியாகும்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அலுவலக பராமரிப்பு செலவுக்காக ஒதுக்கப்படும் நிதி உட்பட பல்வேறு முறைகேடுகளில் குருராகவன் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இதுகுறித்து வங்கியின் மேலாளா் செளதன்யா ஆய்வு மேற்கொண்டதில், சுமாா் ரூ.2.50 கோடி வரை குருராகவன் முறைகேடு செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வங்கியின் மேலாளா் செளதன்யா ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகாா் அளித்தாா்.
புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் கலையரசி தலைமையில் விசாரணை மேற்கொண்டனா். இதில், குகுராகவன் முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து குருராகவனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.