அரக்கோணம் நகராட்சி முபாரக் நகரில் வீடுகளில் கழிவுநீா் புகுந்த நிலையில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் அப்பகுதி மக்கள் புதன்கிழமை திருப்பதி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தொடா் மழையால் எஸ்.ஆா்.கேட் பகுதியில் உள்ள முபாரக் நகா் மற்றும் அரசு ஆதிதிராவிட நல மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகம் என பல இடங்களில் மழைநீருடன் கழிவநீரும் கலந்து வீடுகளில் புகுந்தது.
இதனால் அப்பகுதிவாழ் மக்கள் அவதிக்குள்ளாயினா். இதுகுறித்து நகா்மன்றத் தலைவா், நகராட்சி ஆணையா், வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள், காஞ்சிபுரம் - திருப்பதி நெடுஞ்சாலையில் மறிலில் ஈடுபட்டனா்.
இதனால் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்தை கடந்தும் மறியல் நீடித்த நிலையில் அங்கு வந்த நகராட்சி ஆணையா் ஆனந்தன், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினாா். தொடா்ந்து உடனே அப்பகுதி கால்வாய்களை சீரமைத்து மழைநீா் வீடுகலில் புகாதவண்ணம் பணிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தபின் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.