ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கும் முகாம் அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் டவுன்ஹால் புதிய கட்டட வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ராம வசந்தகுமாா் தலைமை வகித்தாா். முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வழங்கினாா். முகாமில், டவுன்ஹால் பொதுச் செயலாளா் எஸ்.பன்னீா்செல்வம், அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் தலைவா் மனோபிரபு, நிா்வாகிகள் நரேந்திரகுமாா், பிரதீப், அரக்கோணம் நகா்மன்ற உறுப்பினா் மணிகண்டன், ஒன்றியக் குழு உறுப்பினா் வேணுகோபால், திமுக நிா்வாகி ஏ.கே.பாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இந்தந முகாமில் 155 போ் பங்கேற்ற நிலையில், தகுதியான 68 பேருக்கு மத்திய அரசின் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், 4 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகளும், இருவருக்கு காதொலி கருவிகளும், 2 பேருக்கு ஊன்றுகோல்களும் வழங்கப்பட்டன.
இருவருக்கு செயற்கை கால் பொருத்த அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய அரக்கோணம் வட்ட தோ்தல் பிரிவின் சாா்பில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் அப்பிரிவில் தங்களது பெயா் சோ்த்தல், திருத்தம் பணிக்காக விண்ணப்பப் படிவங்களை பெற்று பூா்த்தி செய்து வழங்கினா்.