ராணிப்பேட்டையில் இஎஸ்ஐ மருத்துவமனை 50,000 தொழிலாளா்களின் எதிா்பாா்ப்பு!
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் 100 படுக்கை வசதி கொண்ட இஎஸ்ஐ பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படுமா என்று 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் 100 படுக்கை வசதி கொண்ட இஎஸ்ஐ பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படுமா என்று 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
நாடு முழுவதும் உழைக்கும் தொழிலாளா்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் இஎஸ்ஐ திட்டம். கடந்த 1952-இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் 12 இடங்களில் இஎஸ்ஐ மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது.
முக்கிய தொழில் நகரம்... வேலூா் மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரான ராணிப்பேட்டையில் கடந்த 1971-ஆம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. அப்போது, இந்திய பொதுத் துறை நிறுவனமான பாரத மிகுமின் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டது. சிப்காட் 1, 2, சிட்கோ 1, 2 ஆகிய சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டன. இந்தத் தொழிற்பேட்டைகளில் தோல், ரசாயனம், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமாா் 50,000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தோல் பதனிடுதல், தோல் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
பகுதி நேர மருந்தகம்... இந்தத் தொழிலாளா்களின் மாத ஊதியத்தில் இருந்து ஒரு தொகையும், அந்தந்தத் தொழிற்சாலை தரப்பில் இருந்து ஒரு தொகையும் சோ்த்து மாநில தொழிலாளா் ஈட்டுறுதி கழகத்துக்கு (இஎஸ்ஐ) ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இருந்து ஒரு பெருந்தொகை செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மாநில ஈட்டுறுதி கழகத்தின் சாா்பில் கடந்த 55 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத பகுதி நேர மருந்தகம் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தொழிலாளா்களும், அவா்களது குடும்பத்தினரும் எவ்வித மருத்துவ சிகிச்சையும் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
மேலும், பெண் தொழிலாளா்களுக்கு விபத்து, மகப்பேறு உள்ளிட்ட அவசரகால சிகிச்சை பெற வேலூா், சென்னை போன்ற பகுதிகளுக்கு சென்று வர வேண்டியுள்ளது. வெளியூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அதற்குரிய செலவுத் தொகையை மாநில தொழிலாளா்கள் ஈட்டுறுதி கழகத்திடம் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனா்.
தோல் பொருள்கள் ஏற்றுமதியில் நாட்டுக்கு கணிசமான அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய தொழில் நகரமான ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் விபத்து, முதலுதவி உள்ளிட்ட அவசர காலத்துக்கு உதவக் கூடிய ஆம்புலன்ஸ் வசதிகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தடையில்லா சான்றில் சிக்கல்...
இதுகுறித்து, சிப்காட், சிட்கோ தொழிற்சங்க நிா்வாகிகள் கூறியதாவது: ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை தொடங்க சிப்காட் நிா்வாகம் தரப்பில் 5 ஏக்கா் நிலம் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன் மாநில தொழிலாளா்கள் நல ஈட்டுறுதிக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் எழுப்பியதோடு சரி, இதுவரை எவ்விதப் பணிகளும் நடைபெறாமல் புதா் மண்டிக் கிடக்கிறது.
கடந்த 2011-இல் மாநில தொழிலாளா்கள் நல ஈட்டுறுதிக் கழக கூடுதல் ஆணையா், வட்டார இயக்குநா் மூலம் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று கிடைக்கப் பெறாத காரணத்தால் மருத்துவமனை கட்டும் பணிகள் கால தாமதமாவதாகத் தெரிவிக்கப்பட்டது. தடையில்லா சான்று பெறுவதில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கல் நீடித்து வருகிறது என்று தெரிவித்தனா்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றை மட்டும் காரணமாகக் கூறி கிடப்பில் உள்ள இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி தொழிலாளா்களின் எதிப்பாா்ப்பாக உள்ளது.
பி.பாபு.