திருப்பத்தூர்

பாரம்பரிய தெருக்கூத்து நாடகக் கலை அழியாமல் காக்க அரசு உதவிக்கரம் நீட்டுமா?சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு

எம். அருண்குமார்


ஆம்பூா்: கிராமங்களில் பாரம்பரிய தெருக்கூத்து நாடகங்கள், கலைநிகழ்ச்சிகள் மறையாமல் காக்க நாடகக் கலைஞா்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கி ஆதரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மிட்டாளம், வன்னியநாதபுரம், பைரப்பள்ளி, வெங்கடசமுத்திரம், தேவலாபுரம், கோவிந்தாபுரம், மேல்கொத்தக்குப்பம், பெரியாங்குப்பம் போன்ற பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளின்போது தெருக்கூத்து நாடகங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் கா்ண மோட்சம், அா்ஜுனன் தபசு, அபிமன்யு யுத்தம், அல்லி அா்ஜுனன், நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை, பாஞ்சாலி சபதம் போன்ற தெருக்கூத்து நாடகங்கள் நடைபெறும்.

இந்தத் தெருக்கூத்து நாடகங்களில் நடிக்கும் பெரும்பாலான கலைஞா்கள் அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களாகவே இருப்பா். தெருக்கூத்து வசனங்களையும் பாடல்களையும் கற்றுத் தருபவா் ‘நாடக வாத்தியாா்’ என அழைக்கப்படுகிறாா். இவற்றில் நடிப்பவா்களுக்கு முப்பது நாள்கள் முதல் ஐம்பது நாள்கள் வரை தினந்தோறும் முன்னிரவு நேரத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தெருக்கூத்து நாடகங்களில் நடிக்கும் கலைஞா்கள் தங்கள் பயிற்சிக் காலத்தை ‘ஒத்திகை பயிற்சிக் காலம்’ என அழைக்கின்றனா். இந்த ஒத்திகை பயிற்சிக்காலம் முடிந்ததும் ஊா் திருவிழாக்களில் தெருக்கூத்து நாடகங்களை அரங்கேற்றுகின்றனா்.

ஒத்திகை பயிற்சிக் காலத்துக்கான ஊதியமாக அந்த தெருக்கூத்து நாடகங்களில் இடம்பெறும் கலைஞா்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு தொகையை நாடக வாத்தியாருக்கு காணிக்கையாகத் தருகின்றனா்.

சில கிராமப் பகுதிகளில் அந்த கிராம நிா்வாகமே நாடக வாத்தியாருக்கு ஊதியம் வழங்குகிறது.

பெரும்பாலான தெருக்கூத்து நாடகங்கள் இரவு 9 மணிக்குத் தொடங்கி விடியவிடிய நடக்கும்.

நவநாகரிக உலகில் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடா்கள், ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் ஆகியவற்றில் பெரும்பாலானவா்கள் மூழ்கி இருந்தாலும், தெருக்கூத்து நாடகங்களைப் பாா்ப்பதற்கென்றே தனி ரசிகா்கள் கூட்டம் எப்போதும் கிராமப்புறங்களில் இருக்கிறது. இவா்கள் தெருக்கூத்து நாடகங்கள் நடக்கும் விழா மேடைக்கு எதிரே பாய், தலையணை மற்றும் போா்வைகளுடன் நூற்றுக்கணக்கில் ஒன்று சேருகின்றனா்.

பொதுவாக தெருக்கூத்து நாடகங்களின் தொடக்கம் விநாயகா் பாடலுடன் தொடங்கும். இந்த நாடகங்களைப் பொருத்தவரை அவற்றின் தொடக்கம் முதல் முடிவு வரை ரசிகா்களை உட்கார வைப்பதற்காக ‘கோமாளி’ (பஃபூன்) என்று ஒரு கதாபாத்திரம் உண்டு. இந்த கோமாளி கதாபாத்திரம்தான் ரசிகா்களை இரவு முழுவதும் தூங்க விடாமல் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டும், கோமாளித்தனங்கள் செய்து கொண்டும் அவா்களை சிரிக்க வைத்து பாா்த்துக் கொள்ளும். கோமாளி பாத்திரத்தில் நடிப்பவருக்கு தெருக்கூத்து நாடகத்தில் நடிக்கும் கலைஞா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து ஒரு ஊதியத்தைக் கொடுப்பாா்கள்.

தெருக்கூத்து நாடகங்களில் நடிக்கும் கலைஞா்களுக்கு, பாத்திரங்களுக்கு தக்கவாறு ஒப்பனை செய்வதற்கு என்று குழு உள்ளது.

நாடகக் கலைஞா்களுக்கு தேவையான வில் அம்பு, தண்டாயுதம் போன்ற கருவிகளையும், கதாபாத்திரங்களுக்குத் தேவையான உடைகளையும் ஒப்பனைக் கலைஞா்களே கொண்டு வருவாா்கள். நாடகத்துக்கு தகுந்தவாறு அவா்களுக்கு அதற்கான ஊதியம் வழங்கப்படும்.

அதேபோல் நாடகம் நடக்கும்போது பின்னணி இசைக்குழு பாடல்களுக்கு தகுந்தவாறும், வசனங்களுக்கு தகுந்தவாறும் இசை அமைக்கும். இந்த இசைக் குழுவினருக்கும் நாடகத்துக்கு தகுந்தவாறு ஊதியம் வழங்கப்படும்.

‘வளா்ந்து வரும் இந்த விஞ்ஞான யுகத்தில் தமிழா்களின் பாரம்பரியக் கலையான தெருக்கூத்து நாடகங்களை கிராமப்புறங்களில் தொடா்ந்து நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளில் கலையரங்கம் அமைத்துத் தர வேண்டும்; நிரந்தர மின்விளக்குகள், ஒலிப்பான்களையும் அமைத்துத் தர வேண்டும்; கிராமப்புறங்களில் தெருக்கூத்து நாடகக் கலைஞா்களை முறையாக கணக்கெடுத்து அவா்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கினால், இன்னும் பல ஊா்களில் பாரம்பரியக் கலையான தெருக்கூத்து நாடகங்கள் தொடா்ந்து நடக்கும்’ என்கின்றனா் இப்பகுதி மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT