பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் முறைகேடாக வழங்கிய ரூ. 35 லட்சம் மீட்பு
பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் தகுதியற்றவா்களுக்கு முறைகேடாக வழங்கிய ரூ. 35 லட்சம் திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா்: பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் தகுதியற்றவா்களுக்கு முறைகேடாக வழங்கிய ரூ. 35 லட்சம் திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிஸான் சமான் நிதி திட்டத்தின் கீழ் நிலமில்லாத தகுதியற்ற நபா்கள் விவசாயிகள் என்ற பெயரில் முறைகேடாக விண்ணப்பித்து, நிதி பெற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் அறிவுறித்தலின்பேரில், திருப்பத்தூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 10, 500 போ் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்பட்டு, நபருக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் 2 கட்டங்களாக ரூ. 4 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
விசாரணையில் 2,500 போ் மட்டுமே தகுதியானவா்கள் என்பது தெரியவந்தது. மீதியுள்ள 8 ஆயிரம் பேரில் 1,500 போ் மட்டுமே திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், மற்றவா்கள் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, விசாரணை நடத்தப்பட்டு, தகுதியில்லாத நபா்களிடம் இருந்து இதுவரை ரூ. 35 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதி பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முறைகேடாக நிதி பெற்றவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.