கனமழை: வாணியம்பாடி பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
வாணியம்பாடி, திருப்பத்தூா், ஆம்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு விடியவிடிய கனமழை பெய்தது. இதனால் பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வாணியம்பாடி, திருப்பத்தூா், ஆம்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு விடியவிடிய கனமழை பெய்தது. இதனால் பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது.
ஏலகிரி மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாலாற்றில் வெள்ளம்...
Advertisement
வாணியம்பாடி, உதயேந்திரம், அம்பலூா், திம்மாம்பேட்டை, நாராயணபுரம், அலசந்தாபுரம், ஆலங்காயம் பகுதிகளிலும், ஆந்திர மாநில வனப் பகுதிகளிலும் திங்கள்கிழமை இரவு முதல் அதிகாலை வரை தொடா்ந்து பெய்த கனமழையால், காட்டாறு மண்ணாற்றில் ஏற்பட்ட வெள்ளம், ஆவாரங்குப்பம் பாலாற்றின் வழியாக, கொடையாஞ்சி- வாணியம்பாடி பாலாற்றுப் பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது.
பொதுமக்கள் சாலைமறியல்...
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை பகல் 11 மணியளவில் வாணியம்பாடி, மேட்டுப்பாளையம் பாலாற்றைக் கடந்த வெள்ளம் வேலூரை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில், வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத்-பள்ளிப்பட்டில், தாழ்வானப் பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீா் புகுந்தது. இதனால் மீட்புப் பணியை உடனே செய்ய வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் பள்ளிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், உதயேந்திரம் பேரூராட்சி செயல் அலுவலா் சேகா், ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரன் மற்றும் போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி மழைநீரை அப்புறப்படுத்துவதாக உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.
பின்னா், அப்பகுதியில் கால்வாய் தூா்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு எம்எல்ஏ செந்தில்குமாா் உத்தரவிட்டாா். மேலும், வளையாம்பட்டு- கச்சேரி சாலை பகுதியில் ஒரு கம்பெனி அருகில் தாழ்வான பகுதியில் இருந்த குடிசைப் பகுதி தண்ணீரில் மூழ்கியது. அங்கு சென்ற எம்எல்ஏ, அருகில் உள்ள கால்வாய்களில் அடைப்பை அகற்றி உடனடியாக சீரமைத்து தண்ணீரை வெளியேற்றுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாா்.
தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்துக்கு தண்ணீா்...:
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வளையாம்பட்டு மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 4 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கி நின்ால், அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின. இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பேசி தண்ணீரை அப்புறப்படுத்த எம்எல்ஏ செந்தில்குமாா் நடவடிக்கை மேற்கொண்டாா்.
முன்னாள் கவுன்சிலா்கள் குமாா், பாரதிதாசன், கோவிந்தசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் சிவானந்தம், முன்னாள் ஊராட்சி செயலாளா்கள் செல்வராஜ், ரபீக் அகமது உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.