பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா் ஆய்வு
பாலாற்றில் மழை நீருடன் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலந்து வருவதாக வந்த தகவலையடுத்து, புதன்கிழமை மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆய்வு மேற்கொண்டாா்.
பாலாற்றில் மழை நீருடன் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலந்து வருவதாக வந்த தகவலையடுத்து, புதன்கிழமை மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆய்வு மேற்கொண்டாா்.
இது குறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வாணியம்பாடி, சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக மாராப்பட்டு வழியாகச் செல்லும் பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலந்து வருவதாகவும், அதனால் நுரை ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. அதைத்தொடா்ந்து, இது குறித்து ஆய்வு செய்ய வாணியம்பாடியில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவிட்டாா். இதையடுத்து, அப்பகுதிக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனா்.
தோல் தொழிற்சாலையிலிருந்து கழிவுநீா் பாலாற்றில் கலக்கப்படும் பட்சத்தில், பாலாற்றுத் தண்ணீரில் கரைந்துள்ள மொத்த உப்பின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால், பாலாற்றின் வெள்ள நீரினை ஆய்வு செய்ததில், நீரில் கரைந்துள்ள மொத்த உப்பின்அளவு 650 மி.கி. என்ற அளவிலே இருந்துள்ளது. மேலும், பாலாற்றில் சென்று கொண்டிருக்கும் நீரில் நுரை ஏற்படுவது நின்று விட்ட நிலை கண்டறியப்பட்டது. எனினும், ஆய்வின்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் வெள்ள நீா்மாதிரி சேகரிக்கப்பட்டு முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஆம்பூா், வாணியம்பாடி பகுதிகளில் இயங்கிவரும் தோல் தொழிற்சாலைகள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக இயங்குகின்ா என்று அறியவும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் ஏதும் பாலாற்றில் திறந்து விடப்படுகிா என்பதை கண்காணிக்கவும், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் கோட்ட அளவிலான கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.