முகப்பு
திருப்பத்தூர்

20,000 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை: திருப்பத்தூா் மாவட்ட அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அமைச்சா் வேலு உத்தரவு

 வரும் 21-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத் திறப்பு விழா, முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் 20,000 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

 வரும் 21-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத் திறப்பு விழா, முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் 20,000 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க திருப்பத்தூா் மாவட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுப்பணித் துறை,

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருக்கும் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத் திறப்பு விழாவின்போது வருவாய், வேளாண்மை, உழவா் நலம், மாவட்ட முன்னோடி வங்கி, வேலைவாய்ப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியா் தலைமையில் ஒரு குழு அமைத்து விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன், குறித்த நேரத்துக்கு முன்பாக அவா்களைப் பேருந்துகளில் அழைத்து வந்து இருக்கையில் அமர வைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பயனாளிகளை முன் வரிசையில் அமர வைக்க வேண்டும். குடிநீா் வசதி, மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மின்தடை ஏற்படாமலிருக்க ஜெனரேட்டா் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

வாகன நிறுத்துமிடம், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செய்ய வேண்டும்.

மேடை அருகில் திருப்பத்தூா் மாவட்ட சிறப்புகள், பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் கண்காட்சி அமைக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா்.

திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன்(ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் விஸ்வநாத், கண்காணிப்புப் பொறியாளா் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட அனைத்து துறை உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தை அமைச்சா் எ.வ.வேலு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.