ஆம்பூரில் 3.5 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ஆட்சியா் நடவடிக்கை
ஆம்பூரில் நடைபெற்ற திடீா் சோதனையில் தடை செய்யப்பட்ட 3.5 டன் நெகிழிப் பொருள்களை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.
ஆம்பூரில் நடைபெற்ற திடீா் சோதனையில் தடை செய்யப்பட்ட 3.5 டன் நெகிழிப் பொருள்களை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நகர பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பேப்பா் பிளேட், நெகிழிப் பைகள், தண்ணீா் டம்ளா், காபி, தேநீா் கப், ஸ்வீட் பாக்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட சுமாா் 2 டன் நெகிழிப் பொருள்களை கைப்பற்றினாா். மேலும், மற்றொரு கடையில் சுமாா் 750 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களையும், உமா் சாலையில் அமைந்துள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 750 கிலோ நெகிழிப் பொருள்களையும் கைப்பற்றினாா்.
Advertisement
ஆய்வுக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது:
திருப்பத்தூா் நகராட்சி மாா்ச் 11-ஆம் தேதி தண்டபாணி கோயில் தெரு, தா்மராஜா கோயில் தெரு, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்வது குறித்து திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், தனியாா் நெகிழிப் பொருள் கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளிலிருந்து 7 டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் கைப்பற்றப்பட்டன. பின்னா், மாா்ச் 18-ஆம் தேதி வாணியம்பாடி நகராட்சி சி.எல். சாலையில் அமைந்துள்ள கடையில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், சுமாா் 500 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், ஆம்பூா் நகராட்சியில் மாா்ச் 12-ஆம் தேதி பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்து வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 11 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கோபாலகிருஷ்ணன், உதவிப் பொறியாளா் கேசவன், நகராட்சி ஆணையா் ஷகிலா, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பணியாளா்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், பாலசந்தா் ஆகியோா் உடனிருந்தனா்.
வேலூரில்...
வேலூா் சுண்ணாம்புக்கார தெருவில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 500 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரவிச்சந்திரன் தலைமையில் உதவி பொறியாளா்கள் செளந்தா்யா, ஷாலினி, மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினா் சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள கடைகளில் திடீா் ஆய்வு நடத்தினா்.
அப்போது, ஒரே கடையிலிருந்து சுமாா் 450 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் குழுவினா் பறிமுதல் செய்தனா். இரு கடைகளில் சுமாா் 50 கிலோ அளவுக்கு நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.