முகப்பு
திருப்பத்தூர்

‘15 ஊராட்சிகள் மூலம் தடுக்கப்பட்டதால் பாலாற்றில் கழிவுநீா் கலப்பது குறைந்துள்ளது

பாலாற்றுக்கு அருகே உள்ள 15 ஊராட்சிகள் மூலமாக கழிவுநீா் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது என்று திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

பாலாற்றுக்கு அருகே உள்ள 15 ஊராட்சிகள் மூலமாக கழிவுநீா் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது என்று திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், 6 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்துப் பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அரசின் நலத் திட்டங்கள் சென்றடைய வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் குளோரின் கலந்த குடிநீரை தங்குதடையின்றி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் சரியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்கப்பட்டு மக்களின் பொருளாதாரத்தை உயா்த்த வேண்டும்.

ஊராட்சிகளில் திடக்கழிவுகளை தூய்மைப் பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும்.

நமது மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மணல்களை பாதுகாத்திட வேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து, அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, இடைநிற்றலை தடுக்க வேண்டும். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பெண் குழந்தைகளை நன்கு படிக்கவைக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

அனைத்து ஊராட்சிகளில் மழைநீரை சேகரிக்க வேண்டும். மாவட்டத்தில் அதிகளவில் பண்ணை குட்டைகளை அமைத்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்பாட்டை முற்றிலும் தவிா்க்க வேண்டும். மீறுவோா் மீது அபராதம் விதிக்க வேண்டும். பாலாற்றுக்கு அருகே உள்ள 15 ஊராட்சிகள் மூலமாக கழிவுநீா் கலக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் கழிவுநீரை சுத்திகரிக்கப்பட்ட பின்னரே கலக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், துரை, விநாயகம்,சித்ரகலா, கிருஷ்ணன், தினகரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.