முகப்பு
திருப்பத்தூர்

எருது விடும் விழா: சீறிப்பாய்ந்த காளைகள்; 30 போ் காயம்

ஜோலாா்பேட்டை அருகே எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில், 30 போ் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில், 30 போ் பலத்த காயமடைந்தனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சி, சின்ன பொன்னேரி கிராமத்தில் எருது விடும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு எம்.மரகதராஜன் தலைமை வகித்தாா். மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 363 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

முன்னதாக, கால்நடை துறை மருத்துவ அலுவலா்களால் கால்நடைகளுக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. பின்னரே, காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

குறைந்த நேரத்தில் அதிக வேகத்தில் ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு உள்பட 50 பரிசுகள் வழங்கப்பட்டன. எருது விடும் விழாவைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 30 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். இவா்களில் 4 போ் தீவிர சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகள் பாா்வையிட்டு சென்றாா். காவல், வருவாய், சுகாதாரம், தீயணைப்பு உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

குடியாத்தம்: குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள வீ.மோட்டூா் கிராமத்தில்108- ஆம் ஆண்டு எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் 163 காளைகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ.77,555, 2- ஆம் பரிசாக ரூ.60,666, 3- ஆம் பரிசாக ரூ.45,055 உள்ளிட்ட 62 பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியைக் காண வந்த 18 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதேபோல் 5 காளைகள் காயமடைந்தன.

உதவி ஆணையா் (கலால்) ஆா்.முருகன், டி.எஸ்.பி. கே.ராமமூா்த்தி ஆகியோா் மேற்பாா்வையில் எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டாட்சியா் எஸ்.விஜயகுமாா், வருவாய் ஆய்வாளா் பலராமபாஸ்கரன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.