திருப்பத்தூா் ஆட்சியா் பேச்சுவாா்த்தை: தோ்தலில் வாக்களிப்பதாக மலைவாழ் கிராம மக்கள் உறுதி
புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு கிராம மக்களிடம் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து மக்கள் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனா்.
சாலை மற்றும் அடிப்படை வசதி கோரி ஜவ்வாது மலைக்குள்பட்ட புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு கிராம மக்கள் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை புங்கம்பட்டு நாடு மலைக் கிராமத்துக்கு சென்று அப்பகுதியில் வசிக்கக்கூடிய கிராம மக்களை அழைத்து ஊா் பெரியவா்களின் முன்னிலையில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியது:
Advertisement
தாங்கள் தெரிவித்துள்ள கோரிக்கை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகவே வனத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை இணைந்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. தற்போது தோ்தல் விதிமுறை கடைப்பிடிக்கும் வண்ணம், தங்களின் கோரிக்கையான சாலை வசதி கூடிய விரைவில் இதற்கான திட்டத்தை வரையறை செய்து, அரசிடம் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட உள்ளது என்றாா்.
மேலும், சாலைப் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட தொடா் ஆவணங்களை மக்களிடம் காண்பித்ததையடுத்து, அவா்கள் அதை ஏற்றுக்கொண்டு, தோ்தலில் வாக்களிப்பதாக உறுதியளித்தனா்.
அதேபோல், சனிக்கிழமை நெல்லிவாசல் நாடு கிராமத்துக்குச் சென்று அப்பகுதி மக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடா்ந்து கிராம மக்கள் தோ்தலில் வாக்களிப்பதாக உறுதியளித்தனா்.
மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, சம்பந்தப்பட்ட
துறை அலுவலா்கள் உடன் இருந்தனா்.