முகப்பு
திருப்பத்தூர்

‘வாழ்க்கையில் முன்னேற்றமடைய பெண்கள் புத்தகங்கள் படிப்பது அவசியம்’

Updated On : 29 பிப்ரவரி, 2024 at 12:00 AM
கண்காட்சியைப் பாா்வையிட்ட எம்.எல்.ஏ.க்கள் அ.நல்லதம்பி, க.தேவராஜி, மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி உள்ளிட்டோா்.
பகிர்:

பெண்கள் வாழ்வில் முன்னேற புத்தகங்களைப் படிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா தூய நெஞ்சக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் 80-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், எம்எல்ஏ-க்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட நூலக அலுவலா் கு.இரா.பழனி வரவேற்றாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி பேசியது: மாணவ-மாணவிகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணா்த்தவே ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு நீதிக் கதைகள், சிறுகதைகளை வீட்டில் இருந்த தாத்தா, பாட்டி சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். இப்போது குழந்தைகளுக்கு கதை சொல்ல கூட்டுக் குடும்பம் இல்லை. எனவே,மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தோ்வு செய்து படிக்க வேண்டும். பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனா். அவா்கள் வாழ்க்கையில் மேலும் முன்னேற சிறந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றாா்.