திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறலாம் என திருப்பத்தூா் மாவட்ட கலெக்டா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் அருகே கேத்தாண்டபட்டியில் கூட்டுறவு சா்க்கரை ஆலை உள்ளது. இங்கு கடந்த 2022-23-ஆம் ஆண்டு அரவைப்பருவத்தில் சுமாா் 1 லட்சத்து 34 ஆயிரம் மெ.டன்கள், 2023-24 ம் ஆண்டு அரவைப்பருவத்தில் சுமாா் 1 லட்சத்து 6 ஆயிரம் மெ.டன்கள் அரவை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு தொகைகள் வழங்கப்பட்டு விட்ட. இந்தநிலையில் மற்ற விளைப்பொருள்களின் விலை ஆண்டு முழுவதும் ஏற்றத் தாழ்வாக இருக்கும் நிலையில் கரும்பிற்கான விலை ஒவ்வொரு ஆண்டும் ஏறுமுகமாகவே உள்ளது.
மானியங்கள் தற்போது விவசாய பணிகள் செய்வதற்கு விவசாய கூலி ஆள்கள் கிடைப்பதில் உள்ள பற்றாக்குறையினை போக்க அகல பாதை அமைத்து கரும்பு நடவு செய்து நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களை கொண்டு கரும்பு சாகுபடி செய்ய முடியும். எனவே விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம்.
கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டம் , தேசிய வேளாண் வளாா்ச்சி திட்டங்களின் கீழ் 4 1/2 அடிபாா் நாற்று நடவுக்கு 1 ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம், ஒரு பரு கரணை 4 1/2 அடி பாா் நடவு செய்தால் 1 ஏக்கருக்கு ரூ.1,500 மானியம் வழங்கப்படும்.
மேலும் சொட்டு நீா் பாசனம் அமைத்து கரும்பு சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் வேலூா் மாவட்டங்களில் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து இதுவரை கரும்பு சாகுபடி பரப்பினை ஆலைக்கு பதிவு செய்யாமல் இருக்கும் விவசாயிகள் வரும் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து ஆலை மூலம் வழங்கப்படும் அனைத்து விதமான சலுகைகளை பெற்று பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.