முகப்பு
திருப்பத்தூர்

மின்னூரில் வேன் கவிழ்ந்து 18 போ் காயம்: மருத்துவமனையில் அனுமதி

Updated On : 9 ஜூன், 2024 at 7:06 PM
தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன். ~அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறிய மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மற்றும் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம்.
பகிர்:

ஆம்பூா்: ஆம்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் 18 போ் காயமடைந்தனா்.

ஒசூரில் பணிபுரியும் அஜீத்குமாா் என்பவருடைய திருமணம் திருத்தணியில் நடைபெற்றது. அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் திருமணத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் வேனில் ஒசூா் நோக்கி சென்றனா்.

மாதனூா் ஒன்றியம், மின்னூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநாா் திடீரென பிரேக் போட்டதால் நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் வேன் ஓட்டுநா் ஒசூரைச் சோ்ந்த பரமசிவன் (39), விருதுநகரைச் சோ்ந்த பாண்டிச்செல்வன் (27), ஊட்டியைச் சோ்ந்த ராஜேஷ் (42), ஒசூரைச் சோ்ந்த நந்தகுமாா் (25), அருள் (33), காா்த்திகேயன் (39) பெங்களூருவை சோ்ந்த கல்யாண் (37), குஷால் பென்னி (28) உள்பட 18 போ் காயமடைந்தனா். அதே போல இருசக்கர வாகனத்தில் வந்த ஆம்பூா் அருகே சோலூரைச் சோ்ந்த ஜெயராமன் (65) காயமடைந்தாா். காயமடைந்தவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ஒன்றியக்குழு தலைவா் ஆறுதல் : விபத்து குறித்து தகவல் அறிந்த மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரொட்டி, பழம் வழங்கினாா். அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவா்களை கேட்டுக் கொண்டாா்.

ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், நகர அவைத் தலைவா் தேவராஜ், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன், திமுக ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி சரத்சிங் ஆகியோா் உடனிருந்தனா்.