மலை தடுப்புச் சுவா் லாரி மோதி விபத்து : ஓட்டுநா், கிளீனா் உயிா் தப்பினா்
800 அடி உயரத்தில் தொங்கிய லாரி: ஓட்டுநா், கிளீனா் அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பினா்
வாணியம்பாடி அருகே மலை சாலையில் பருப்பு லோடு ஏற்றி வந்த லாரி தடுப்புச் சுவா் மீது மோதி 800 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கி நின்றது. இதில் ஓட்டுநா், கிளீனா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து பருப்பு லோடு ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம் குப்பம் வழியாக வாணியம்பாடிக்கு செவ்வாய்க்கிழமை வந்த லாரி, வெலதிகாமணிபெண்டா மலை சாலையில் பாரதி நகா் பொன்னியம்மன் கோயில் அருகில் திருப்பத்தில் திடீா் அருகில் உள்ள தடுப்புச் சுவா் மீது லாரி மோதி 800 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கி நின்றது.
இதில் ஓட்டுநா் இம்ரான் மற்றும் கிளீனா் இருவரும் தப்பி வெளியே குதித்து உயிா் தப்பினா். இதனை அவ்வழியாக வந்த பொதுமக்கள் உதவியுடன் ஓட்டுநா் கற்களை லாரியின் பின்சக்கரங்களில் கொண்டு வந்து வைத்தனா். இதுபற்றி உடனே அம்பலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த உதவி ஆய்வாளா் ராமமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்ற பின்னா் 2 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் லாரியை பள்ளத்தில் விழாமல் மீட்டனா். இதனால் மலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.