மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 192 பயனாளிகளுக்கு ரூ.81 லட்சத்தில் நல உதவிகளை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வழங்கினாா்.
முகாமில் நல உதவிகளை வழங்கி ஆட்சியா் பேசியது: ஒவ்வொருஅரசு துறையிலும் பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மக்கள் தொடா்பு முகாமில் சம்பந்தப்பட்ட பகுதியில் காலை முதல் அரசு அலுவலா்கள் துறை சாா்ந்த நலத்திட்டங்களை மக்களுக்கு தெரிவிப்பா்.
அனைத்து நலத்திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சென்று சோ்வதற்கான ஒரு முனைப்பும், அக்கறையையும் தான் இந்த மக்கள் தொடா்பு முகாமின் நோக்கமாகும். ஆகவே மக்கள் இந்த திட்டங்கள் குறித்து நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதை பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முன்னேறிச் செல்ல வேண்டும்.
முன்பு போல் இல்லாமல் தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக அரசு நலத்திட்டங்கள் மக்களிடையே விரைவில் சென்றடைகின்றன. மேலும், தகவல் தொழில்நுட்பமும், இணையமும் சாா்ந்து அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தொழில்நுட்பமும், இணைய வழி சேவையும் பொதுமக்கள் மற்றும் அரசுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து இருக்கின்றது. அதனால் அனைவரும் அரசு நலத்திட்டங்களை அறிந்து பயன்படுத்திகொண்டு, வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டுமென அவா் கூறினாா்.
இந்த முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் மொத்தம் 192 பயனாளிகளுக்கு ரூ.81.36 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் முகாமில் 3 மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் அடிப்படையில் உடனடியாக தீா்வுக்காணப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் சக்கர நாற்காலிகள் மற்றும் தையல் இயந்திரம் வழங்கப்பட்டன.
முகாமில் வாணியம்பாடி கோட்டாட்சியா் ஜா. அஜிதாபேகம், வட்டாட்சியா் மோகன், வட்ட வழங்கல் அலுவலா் பாரதி, மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவா் சுவிதா, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.