வாணியம்பாடியில் பயோமைனிங் முறையில் குப்பைகளைப் பிரிக்கும் பணி தொடக்கம்
வாணியம்பாடி நகராட்சியில் ரூ.2.57 கோடியில் பயோமைனிங் முறையில் குப்பைகளைப் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 36 வாா்டுகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஆங்காங்கே மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து வளையம்பட்டு பகுதியில் உள்ள உரக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு உள்ள குப்பைகளை தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2.57 கோடியில் பயோமைனிங் முறையில் பிரிக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் திருநாவுக்கரசு, பொறியாளா் ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளா் சாரதி குமாா், துணைச் செயலாளா் தென்னரசு, ஜெகன் பிரசாத், ஒப்பந்ததாரா் கோகுலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதன்மூலம் ஒரு ஆண்டு காலத்திற்குள் 35,000 டன் குப்பைகள் பிரிக்கப்படும். இப்பணி சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் துறைத் தலைவா் முன்னிலையில் வாலாஜாபேட்டை ஐஸ்பவா் பிரை தனியாா் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.