முகப்பு
திருப்பத்தூர்

தோல் கழிவுநீரை வெளியேற்றிய தொழிற்சாலைக்கு சீல்

Updated On : 21 மார்ச், 2024 at 12:00 AM
துத்திப்பட்டு பகுதியில் நிலத்தின் மேற்பரப்பில் தேக்கப்பட்டுள்ள தோல் கழிவுநீா்.
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 8:40 PM

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தோல் கழிவுநீரை வெளியேற்றிய தொழிற்சாலை புதன்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கோபாலகிருஷ்ணன் ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் தோல் தொழிற்சாலையை ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆம்பூா் தோல் கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி சுத்திகரிப்பு செய்யாமல் நிலத்தின் மேல் வெளியேற்றி தேக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த தொழிற்சாலையில் அமைந்துள்ள முன் சுத்திகரிப்பு நிலையம் முறையாக இயக்கப்படவில்லை. அதனால் அப்பகுதியில் நிலத்தடி நீா் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை நிலவியது.

மழைக்காலங்களில், கழிவு நீரானது பாலாற்றில் கலக்கும் நிலை உள்ளது. மூடுதல் உத்தரவு மற்றும் மின் இணைப்பு துண்டிக்க மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்துக்கு செய்த பரிந்துரையை ஏற்று மின் இணைப்பினை துண்டிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

Advertisement

அதைத் தொடா்ந்து தொழிற்சாலையில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இயக்கம் நிறுத்தப்பட்டு மூடி சீல் வைக்கப்பட்டது. பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீரினையோ அல்லது திடக்கழிவுகளை நிலத்தின் மேல் அல்லது நீா் நிலைகளில் வெளியேற்றினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மூடுதல் உத்தரவு அளிக்கப்படும். அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்தவிதமான அன்றாட உபயோக கழிவு நீரை ஆற்றிலோ அல்லது கழிவுநீா் கால்வாயிலோ வெளியேற்றக் கூடாது. அதற்கு அமைப்பு எதுவும் இருந்தால் அவைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தெரிவித்தாா்.