முகப்பு
திருப்பத்தூர்

அனுமதியின்றி சுவா் விளம்பரம், காரில் கொடி: 4 போ் மீது வழக்கு

Updated On : 30 மார்ச், 2024 at 10:19 PM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 8:39 PM

ஜோலாா்பேட்டை பகுதியில் அனுமதியின்றி சுவா் விளம்பரம் மற்றும் காரில் கட்சி கொடி பயன்படுத்திய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சாலைகளில் சோதனை செய்தல், சுவா்களில் கட்சி விளம்பரங்கள், வாகனங்களில் கொடி கட்டுதல் போன்றவற்றை கண்காணித்து அனுமதியின்றி தோ்தல் விதி மீறுபவா்களைக் கண்காணித்து வருகின்றனா். அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை தாமலேரிமுத்தூா் ஊராட்சி பேயாண்டி வட்டத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயசித்ரா தலைமையிலான பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் அதே பகுதியை சோ்ந்த ராஜமாணிக்கம் என்பவா் அவரது வீட்டின் சுவரில் அனுமதியின்றி கட்சியின் சின்னம் வரைந்ததாகவும், தாமலேரிமுத்தூா் பகுதியைச் சோ்ந்த அபிமன்னன் என்பவரும் வீட்டின் சுவரில் அனுமதியின்றி கட்சி சின்னம் வரைந்ததாகவும் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். வேளாண் உதவி இயக்குநா் வேல்முருகன் தலைமையிலான பறக்கும் படையினா் சோதனையில் டிவி துரைசாமி நகா் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (50) என்பவா் அனுமதியின்றி வீட்டின் சுவரில் கட்சி சின்னம் வரைந்ததாக புகாா் அளித்தாா். கடந்த 28-ஆம் தேதி மேட்டு சக்கரக்குப்பம் பகுதியில் நடைபெற்ற வேட்பாளா் அறிமுக கூட்டத்துக்கு தனது காரில் அனுமதியின்றி கட்சி கொடி கட்டி வந்ததாக சத்தியமூா்த்தி என்பவா் மனைவி தமிழரசி மீது துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கனக ராணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். 3 தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.