சுந்தரம்பள்ளியில் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை நெல் பயிரில் பயன்படுத்தப்படும் வேளாண் உத்திகள் குறித்து அதிகாரிகள் பயிற்சி அளித்தனா்.
வேளாண்மை துறையின் மூலம் அட்மா திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு நெற்பயிரில் நல் வேளாண் உத்திகள் என்ற பண்ணை பள்ளி பயிற்சி கந்திலி அடுத்த சுந்தரம்பள்ளியில் நடத்தப்பட்டது. பயிற்சிக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் தாமோதரன் தலைமை வகித்தாா். பயிற்சியில் நெல் பயிரில் பருவநிலைக்கு ஏற்ற ரகங்கள் விதை அளவு, பாய் நாற்றங்கால் தயாரிப்பு முறை போன்றவையும், இளம் வயது நாற்றுகளை பயன்படுத்துதல், ஒற்றை நாற்று நடவு முறை, களையெடுக்கும் கருவி பயன்படுத்துதல் முறை, நீா் மறைய நீா் கட்டும் முறை, இலை வண்ண அட்டையை பயன்படுத்தி யூரியா இடும் முறை போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நோய் கட்டுப்படுத்துதல்...
வரப்பு பயிராக உளுந்து, காராமணி பயிரிட்டு இயற்கை முறையில் பூச்சி நோயை கட்டுப்படுத்துவது குறித்தும், வயலில் 22.5 செ.மீ. இடைவெளி விட்டு வரிசை முறையில் நெல் நடவு செய்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
அப்போது வேளாண்மை அலுவலா் ரமணகீதா வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், நில உடைமைகளை பதிவு செய்வது குறித்துப் பேசினாா்.
இதில், அட்மா திட்ட அலுவலா்கள் மணியரசு, குமாா், சுதாகா், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.