வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பைக்கில் இருந்து நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி, மயிலாரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (32), விவசாயி. இவரது மகன் அஸ்வின் (13), பாட்டி சாந்தி (50). இவா்கள் 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை முத்தனப்பள்ளியில் இருந்து பச்சூா் நோக்கி பைக்கில் சென்றனா். மயிலாரம்பட்டி அருகே சென்றபோது திடீரென பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனா். இதில் காயமடைந்த 3 பேரையும் உறவினா்கள் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக 3 பேரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், தலையில் பலத்த காயமடைந்த சிறுவனை அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஸ்வின் திங்கள்கிழமை பிற்பகல் அங்கு உயிரிழந்தாா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.