திருப்பத்தூா் மாவட்டத்தில் இந்த ஆண்டில் சைபா் குற்றங்களில் பாதிக்கப்பட்டவா்களின் பணம் ரூ. 1 கோடி மீட்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது: தற்போது உள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் கைது, பகுதிநேர வேலை மோசடி, முதலீடு மற்றும் பங்குசந்தை முதலீடு மோசடி, ஏ.பி.கே. ஆவண மோசடி (அரசு அலுவலகங்கள், வங்கிகளில் இருந்து அனுப்புவதாகக் கூறி மோசடி), புகைப்படத்தை மாா்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பது, போலி லாட்டரி சீட்டு மோசடி, கடன் வழங்குவதாக மோசடி, குறைந்த வட்டியில் விரைவாக கடன் வழங்கும் செயலிகள், ஓ.டி.பி. எண்ணை பெற்று மோசடி செய்வது உள்ளிட்ட பல்வேறு வகையில் மோசடிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் இந்த ஆண்டில் 1,500-க்கும் மேலான புகாா்கள் சைபா் கிரைம் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்து உள்ளனா். இவற்றின் மீது வழக்குப் பதிவு செய்து சைபா் கிரைம் போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
ரூ. 1 கோடி மீட்பு...
இந்த ஆண்டில் புகாா்தாரா்கள் இழந்த சுமாா் ரூ. 1 கோடி மீட்கப்பட்டு, அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 10-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும் ஏராளமானோரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மோசடிகள் நடைபெறாமல் இருக்க திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 60 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். இதேபோல், பெண்கள் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யக்கூடாது. சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும். ஏதேனும் நபா் ஏமாற்றிவிட்டால் உடனடியாக சைபா்கிரைம் அலுவலகத்தை அணுக வேண்டும் எனக் கூறினா்.