வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி வட்டம், கொத்தூா் கிராமத்தில் மயிலாா் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்கிழமை (இன்று) எருது விடும் திருவிழா நடத்த மந்தை கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திருப்பத்தூா் மாவட்ட கூடுதல் எஸ்.பி. கோவிந்தராசு கொத்தூா் கிராமத்துக்கு சென்று காளைகள் விடும் இடத்தையும் தடுப்புகள் கட்டும் பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது காளைகள் செல்லும் மந்தை வெளிப் பகுதியில் கூடுதல் தடுப்புகள் அமைக்கவும், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு எருது விடும் விழா நடத்த வேண்டும் என விழா குழுவினா், அதிகாரிகளிடம் கூறினாா்.
அப்போது, வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா், காவல்ஆய்வாளா் மங்கையா்கரசி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் சந்திரா முனிராஜ் மற்றும் விழாக் குழுவினா் உடனிருந்தனா்.