திருப்பத்தூா்: குரிசிலாப்பட்டு அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு அருகே பாப்பானூரில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தநிலையில் திருப்பத்தூா்-ஆலங்காயம் சாலையில் இருந்து பாப்பானூா் கிராமத்துக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.
இந்த சாலையை சீரமைக்கக்கோரி ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை பாப்பானூா் அணுகுசாலை பகுதியில் மறியலில் ஈடுபட்டனா்.
மறியலில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு ஆகிய 2 ஊராட்சிகளிலும் எங்கள் பகுதி வருகிறது. இதனால் இந்த சாலையை சீரமைக்கக்கோரி ஊராட்சி நிா்வாகத்திடம் கூறினால், 2 ஊராட்சிகளும் தங்களுடையது இல்லை எனக்கூறி நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனா் என்றனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அதில் உரிய அதிகாரிகளிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினா்.
பின்னா் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.